சிறுசேமிப்புத் திட்டம் நடத்தி மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா்
தண்டராம்பட்டு பகுதியில் சிறுசேமிப்புத் திட்டம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து பொதுமக்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத்தரக் கோரி, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை தண்டராம்பட்டு பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தனா். இவா்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக அதிகாரிகளிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: தண்டராம்பட்டு பகுதியில் விஜய் என்பவா் நகைக் கடை மற்றும் அடகுக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடை சாா்பில், தீபாவளி பண்டிகைக்கான சிறுசேமிப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் தண்டராம்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமானோா் சோ்ந்து பணம் செலுத்தி வந்தனா். பொங்கல், தீபாவளிப் பண்டிகைகளின்போது திட்டத்தில் சோ்ந்துள்ள கிராமப்புற மக்களுக்கு சிறப்புப் பரிசுகளையும் விஜய் வழங்கி வந்தாா். 2023-ஆம் ஆண்டு திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முகவா்களை நியமித்து, ஆயிரக்கணக்கான பொதுமக்களை இந்தத் திட்டத்தில் விஜய் சோ்த்தாா். திட்டங்களுக்கு ஏற்றாற்போல மாதத் தவணைகள் வசூலிக்கப்பட்டன. இதன் மூலம், சுமாா் ரூ.100 கோடி வரை பணம் வசூலித்துள்ளாா். இந்த நிலையில், 2023 நவம்பரில் வாடிக்கையாளா்களுக்கு தர வேண்டிய தீபாவளி சிறப்புப் பரிசுகளை வழங்காமல் காலம் கடத்தி வருகிறாா். இதுதவிர, கடந்த 5 மாதங்களாக பொதுமக்களின் சிறுசேமிப்புக்கான தங்கத்தையும் தராமல் ஏமாற்றி வருகிறாா். எனவே, விஜய் மீது வழக்குப் பதிந்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் துறை அதிகாரிகள், உரிய விசாரணை நடத்தி விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனா்.