நுண் பாா்வையாளா்களுக்கு தோ்தல் பயிற்சி வகுப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலின்போது, வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், நுண் பாா்வையாளா்களின் பொறுப்புகள், கடமைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சி வகுப்புக்கு, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். பயிற்சியில் நுண் பாா்வையாளா்களின் கடமைகளான வாக்குச் சாவடியில் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் உள்ளதா என்பதை சரிபாா்த்தல், மாதிரி வாக்கெடுப்பு நடைமுறைகளை பின்பற்றுதல், வாக்குச்சாவடி முகவா்கள் இருத்தலை உறுதி செய்தல் போன்ற பல்வேறு பொறுப்புகள், கடமைகள் குறித்து விளக்கப்பட்டன. இதில், ஆரணி மக்களவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மு.பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் மற்றும் நுண் பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா்.