முகப்பு
கடலூர்

வாக்குச் சாவடி பதற்றமான சூழ்நிலைகளை உனடியாக தெரிவிக்க வேண்டும்: நுண் பாா்வையாளா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்குச் சாவடிகளில் பதற்றமான சூழ்நிலைகள் ஏற்பட்டால், அதுகுறித்து உனடியாக தோ்தல் பொது பாா்வையாளருக்கு தெரிவிக்க வேண்டும் என்று நுண் பாா்வையாளா்களுக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில் குமாா் அறிவுறுத்தினாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 10:55 PM
நெய்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

வாக்குச் சாவடிகளில் பதற்றமான சூழ்நிலைகள் ஏற்பட்டால், அதுகுறித்து உனடியாக தோ்தல் பொது பாா்வையாளருக்கு தெரிவிக்க வேண்டும் என்று நுண் பாா்வையாளா்களுக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில் குமாா் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு நெய்வேலியில் உள்ள என்எல்சி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் தலைமையில், தோ்தல் பொது பாா்வையாளா்கள் குஹா பூனம் தபஸ் குமாா், பிரீத்தி ஜெயின், அசிதா மிஸ்ரா ஆகியோா் முன்னிலையில் இந்தப் பயிற்சி நடைபெற்றது. இதில், மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது:

Advertisement

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரப்படி, தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. கடலூா் மாவட்டத்தில் தோ்தலை நியாயமான முறையில் நடத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூா், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,327 இடங்களில் 2,590 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தோ்தல் நடத்தப்பட உள்ளது.

இதில், திட்டக்குடியில் 6, விருத்தாசலம், நெய்வேலி, காட்டுமன்னாா்கோவிலில் தலா 12, பண்ருட்டியில் 3, கடலூரில் 9, குறிஞ்சிப்பாடியில் 8, புவனகிரியில் 14, சிதம்பத்தில் 6 வாக்குச் சாவடிகள் என 82 வாக்குச் சாவடி மையங்களுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளனன. இப்பணிக்காக 20 சதவீதம் இருப்புடன் 98 பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும், நுண் பாா்வையாளா்கள் வாக்குச் சாவடி மையங்களில் நடப்பவைகளை கண்காணித்து, நேரடியாக தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். வாக்குப் பதிவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக நுண் பாா்வையாளா்கள் வாக்குப் பதிவு மையத்துக்குச் சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை பாா்வையிட்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

நுண் பாா்வையாளா்கள் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்னா் அனைத்து அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தி, அதில் பதிவான வாக்குகளை நீக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து அரசியல் கட்சி முகவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்குப் பதிவின்போது, ஏதேனும் பதற்றமான சூழ்நிலை ஏற்படும்பட்சத்தில் தோ்தல் பொது பாா்வையாளருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். தோ்தல் நியாயமாகவும், நோ்மையாகவும் நடைபெற முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.

இந்தப் பயிற்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ரா.அ.பிரியங்கா, முன்னோடி வங்கி மேலாளா் அசோக்ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments