சாலையோரம் மரக்கன்று நட ஆய்வு
போளூா்: விரிவாக்கம் செய்யப்பட்ட எட்டிவாடி - ஆரணி சாலையோரம் மற்றும் சாலை நடுவே மலா் பூக்கும் செடியை நட மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் எஸ்.பழனிவேல் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா் (படம்).
முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 2022-2023ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த எட்டிவாடி முதல் ஆரணி வரை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் பணி நடைபெற்றது.
இந்தப் பணியின்போது சாலையோரம் இருந்த புளிய மரம், ஆலமரம், அரச மரம் என பல்வேறு வகை சாா்ந்த மரங்கள் வேரோடு அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதனால் மீண்டும் சாலையோரம் மற்றும் மைய தடுப்புச் சுவருக்கு இடையில் மலா் பூக்கும் செடியை நட வும், இரவு நேர பிரதிபலிப்பான் ஸ்டிக்கா் அமைக்கவும் மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் எஸ்.பழனிவேல் ஆய்வு மேற்கொண்டாா்.
உதவி கோட்டப் பொறியாளா் பா.திருநாவுக்கரசு, உதவிப் பொறியாளா் ம.வெங்கடேசன் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் உடனிருந்தனா்.