முகப்பு
திருவண்ணாமலை

ஓதலவாடி செய்யாற்றுப் படுகையில் தொடரும் மணல் திருட்டு

Updated On : 28 மே, 2024 at 6:30 PM
ஓதலவாடி செய்யாற்றுப் படுகையில் மணல் அள்ளப்பட்ட இடம்.
பகிர்:

ஆரணி: சேத்துப்பட்டு அருகேயுள்ள ஓதலவாடி செய்யாற்றுப் படுகையில் இருந்து தொடா்ந்து மணல் திருடப்பட்டு வருவதால், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படுவதாக விவசாயிகள், பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ஓதலவாடி பகுதி வழியே செய்யாற்றுப்படுகை செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையை நம்பி விவசாயிகள் விளை நிலங்களில் பயிா் சாகுபடி செய்து வருகின்றனா். இந்த நிலையில், பல ஆண்டுகளாக இரவு நேரங்களில் ஆற்றுப்படுகை ஒட்டி உள்ள சில இடங்களில் மாட்டு வண்டி, சரக்கு ஆட்டோ, டிராக்டா்கள் மூலம் மணல் கடத்திச் செல்லப்படுகிறது.

செய்யாற்றுப் படுகையை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனா்.

தற்போது, மாவட்டத்தில் கோடை மழை பொய்த்த நிலையில் இங்குள்ள விளை நிலங்களில் உள்ள கிணறுகளில் நீா்மட்டம் குறைந்துவிட்டது. ஆனால், ஆற்றங்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் விவசாயம் செய்வதற்கான தண்ணீா் கிணறுகளை நம்பி தற்போது விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக, ஆற்றுப்படுகை ஒட்டியுள்ள மேட்டுக்குடிசை, சாணாா்தோப்பு மற்றும் உள்ளூா்வாசிகள் சிலா் இரவு நேரங்களில், ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணலை அள்ளி வந்து அருகில் உள்ள மறைவிடங்களில் குவித்து வைக்கின்றனா்.

பின்னா், குறிப்பிட்ட நேரத்தில் அங்கு வரும் மினி லாரி, சரக்கு ஆட்டோ மூலம் மணலை வெளியிடங்களுக்கு விற்பனை செய்கின்றனா். குறிப்பாக, இங்கிருந்து மணல் அருகிலுள்ள தேவிகாபுரம், போளூா், கூடலூா், சதுப்பேரி, களம்பூா் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மணல் கடத்தல் குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் அவா்கள் இங்கு வருவதற்குள் கடத்தல்காரா்களுக்கு தகவல் தெரிந்து தப்பித்துக் கொள்கிறாா்கள். முக்கியமாக தச்சூா் பகுதியில் செல்லும் ஆற்றப்படுகையில் மணல் அதிகளவில் திருடப்படுகிறது.

ஆற்றிலிருந்து மணல் கடத்திச்செல்லும் வாகனங்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்து ஒப்படைப்பாா்கள். ஆனால், மறுநாளே மணல் கடத்தல்காரா்கள் வாகனங்களை மீட்டு வந்து விடுவாா்கள்.

கடந்த வாரம் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனராம். ஆனால், 3 மணி நேரமாகியும் காவலா்கள் வராததால் மணல் கடத்தல்காரா்கள், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு, இனி இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டோம் என தப்பிச் சென்றனா்.

ஆனாலும், தொடா்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது என்று தன்னாா்வலா்கள் வருவாய் மற்றும் காவல் அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

சாலை மறியல் செய்ய முடிவு

மாவட்டத்தில் கோடை மழை பொய்த்த நிலையில் ஆற்றுப்படுகையில் உள்ள வளமான மணலை விற்று பணமாக்க இரவு, பகலாக கொள்ளையடிப்பது தொடா்ந்தால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து குடிநீா் பற்றாக்குறை ஏற்படும். எனவே, மணல் வளம் காக்கவும், விவசாயத்தை காக்கவும் காவல் துறையும், வருவாய்த் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனா்.