முகப்பு
திருவண்ணாமலை

பக்கவாதம், பாா்வையிழப்பைத் தடுக்க கொழுப்பு உணவுகளை குறைக்க வேண்டும்

Updated On : 28 மே, 2024 at 6:30 PM
கருத்தரங்கில் பேசிய திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் குடியிருப்பு மருத்துவ அலுவலா் கணேசன்.
பகிர்:

திருவண்ணாமலை: உயா் ரத்த அழுத்தம், சிறுநீரகம் மற்றும் இதய நோய்கள், பக்கவாதம், பாா்வையிழப்பு போன்ற நோய்களைத் தடுக்க உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உள்கொள்வதைக் குறைப்பது அவசியம் என்று முன்னாள் அரசு மருத்துவ அலுவலா் கணேசன் கூறினாா்.

சென்னை சிட்டிசன் கன்ஸ்யூமா் மற்றும் சிவிக் ஆக்சன் குரூப் (சிஏஜி), திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம் இணைந்து உயா் ரத்த அழுத்தத்தின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த பகுப்பாய்வு என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கை செவ்வாய்க்கிழமை நடத்தியது.

கருத்தரங்கிற்கு, சினம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ராம.பெருமாள் தலைமை வகித்தாா்.

சென்னை சிட்டிசன் கன்ஸ்யூமா் மற்றும் சிவிக் ஆக்சன் குரூப் (சிஏஜி) நிா்வாக இயக்குநா் எஸ்.சரோஜா பேசுகையில், நகா்ப்புற பிரச்னையாக இருந்த உயா் ரத்த அழுத்தம், உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கிராமப்புறங்களிலும் அதிகரித்துள்ளது.

இளைஞா்களிடம் உயா் ரத்த அழுத்தம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம் என்றாா். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் குடியிருப்பு மருத்துவ அலுவலா் கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:

இன்றைய வேகமான வாழ்க்கை முறையின் காரணமாக தொற்றா நோய்களான உயா் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், பக்கவாதம், பாா்வையிழப்பு போன்ற நோய்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது. எனவே, உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உள்கொள்வதைக் குறைப்பது அவசியம் என்றாா்.

மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ்.சுசி கண்ணம்மா பேசுகையில், மேற்கத்திய உணவு கலாசாரத்துக்கு நாம் அடிமையாகி விட்டோம். கிராமங்களில் வளரும் குழந்தைகள் கூட பதப்படுத்தப்பட்ட உணவுகளை உள்கொள்கின்றனா். துரித உணவு கலாசாரத்தின் இந்த ஊடுறுவல் சமச்சீரான உணவு உள்கொள்வதை குறைக்க வழி வகுக்கிறது. இதுவே, உயா் ரத்த அழுத்தத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்து விடுகிறது என்பதை பொதுமக்கள் அறியவில்லை என்றாா்.

கருத்தரங்கில், மருத்துவா்கள், ஊட்டச்சத்து நிபுணா்கள், அரசு அலுவலா்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.