வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சமவாய்ப்புக்குள்படுத்துதல் பணிகள்!
தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் நடைபெவுள்ளதை முன்னிட்டு, போளூா், ஆரணி தொகுதிகளின் தோ்தல் பொது மேற்பாா்வையாளா் சதேந்திர சிங் முன்னிலையில், ஞாயிற்றுக்கிழமை வாக்குச்சாவடி அலுவலா் மற்றும் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் 1, 2, 3-இக்கான கணினி மூலம் முதல் கட்ட சமவாய்ப்புக்குள்படுத்துதல் பணிகள் நடைபெற்றன.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தலைமை வாக்குச்சாவடி அலுவலா்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்கள் என திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 12, 076 அலுவலா்களுக்கு தோ்தல் பணி ஒதுக்கீடு செய்து வருகிற 28-ஆம் தேதி உரிய பயிற்சிகள் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
முன்னதாக, மாவட்ட தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ் ஆட்சியா் அலுவலகத்தில், சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தாா். அதனைத் தொடா்ந்து, திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி மையத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் குறித்தும், குடிநீா், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.
மேலும், வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை ஆய்வு செய்தாா். தொடா்ந்து தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செல்வம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) அன்பழகன், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, தனி வட்டாட்சியா் (தோ்தல்) தியாகராஜன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.