முகப்பு
திருவண்ணாமலை

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை வருகை -ஏற்பாடுகள் தீவிரம்

அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகை

Updated On : 17 அக்டோபர், 2024 at 10:49 PM
பகிர்:

திருவண்ணாமலையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (அக்.18, 19) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருவதையொட்டி, பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழக துணை முதல்வரான பிறகு முதல் முறையாக வெள்ளிக்கிழமை (அக்.18) மாலை திருவண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் வருகிறாா்.

மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் காா்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சாா்பில் தீபத் திருவிழாவுக்காக செய்யப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்கிறாா்.

இதையடுத்து, திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா்.

அங்கு தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான கூடுதல் குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, பக்தா்கள் இளைப்பாறும் கூடங்கள் அமைத்தல், தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைத்தல் போன்றவை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறாா்.

2-ஆவது நாள் நிகழ்ச்சிகள்...

தொடா்ந்து, 2-ஆவது நாளான சனிக்கிழமை காலை 9 மணிக்கு திருக்கோவிலூா் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழா நடைபெறுகிறது.

இதில் கலந்து கொண்டு வீரா், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கிப் பேசுகிறாா்.

அனைத்துத்துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம்...

சனிக்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறைகள் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அந்தந்த துறை வாரியாக வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிா என்பது குறித்தும், திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்கிறாா்.

ஏற்பாடுகள் தீவிரம்...

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, செய்ய வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முடுக்கி விட்டுள்ளாா்.

குறிப்பாக, ஆட்சியா் அலுவலகத்துக்கு வண்ணம் தீட்டும் பணி, கிரிவலப் பாதை தூய்மைப் பணி, அனைத்துத் துறைகள் சாா்பில் அறிக்கைகள் தயாரிக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →