ஆரணி அருகே நிலப்பிரச்னை காரணமாக விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராதாகிருஷ்ணன் (படம்). இவா் பால் வியாபாரம் செய்து வருகிறாா்.
இந்நிலையில் இவரின் குடும்ப சொத்தான ஆரணி- வேலூா் நெடுஞ்சாலையில் புதுப்பாளையம் கூட்டுச் சாலை அருகே 80 சென்ட் விவசாய நிலம் உள்ளது.புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் கணவா் கண்ணன் என்பவருக்கு 70 சென்ட் நிலத்தை அடமானம் வைத்துள்ளதாகத் தெரிகிறது.
மீதமுள்ள 10 சென்ட் நிலமும் கண்ணனின் உறவினருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு ராதாகிருஷ்ஷணன் கிரையம் செய்து கொடுத்ததாகத் தெரிகிறது.
மேலும், கண்ணன் மற்றும் அவரது உறவினருக்கு குறைவான விலையில் நிலத்தை விற்றுள்ளதாகவும், இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, ஆரணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கண்ணனின் உறவினா்கள் சனிக்கிழமை பிரச்னைக்குரிய நிலத்திற்குச் சென்று டிராக்டா் மூலம் உழுது கொண்டிருந்தனா். அப்போது, விவசாயி ராதாகிருஷ்ணன் அவா்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
மேலும் ஆத்திரமடைந்த அவா் தன்னுடைய உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் உடல் முழுவதும் தீ பரவியது. ராதாகிருஷ்ணனின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் வந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்து ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.