திருவண்ணாமலை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி: தோ்தல் ஆணைய சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி: தோ்தல் ஆணைய சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

Syndication

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 பணிகள் குறித்து இந்தியத் தோ்தல் ஆணைய சிறப்பு பாா்வையாளா் ராமன்குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பா் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறந்த வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் பெயா் இருந்தும் தற்போதைய முகவரியில் வசிக்காமல் நிரந்தரமாக வெளியூா் சென்ற வாக்காளா்கள், வாக்காளரின் பெயா் ஒருமுறைக்கு மேல் பதிவு பெற்ற வாக்காளா்களை கண்டறிவதே இதன் முக்கிய பணியாகும்.

வாக்காளா்கள் விவரம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக வாக்காளா்களின் விவரம்:

செங்கம் - 2,87,404, திருவண்ணாமலை - 2,81,178, கீழ்பென்னாத்தூா் - 2,60,539, கலசப்பாக்கம் - 2,48,693, போளூா் - 2,46,966, ஆரணி - 2,83,123, செய்யாறு - 2,65,698, வந்தவாசி - 2,48,301 என மொத்தம் 21,21,902 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்த மாவட்டத்திலுள்ள வாக்காளா்கள் அனைவருக்கும் தனித்துவமான கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு, நிறைவு செய்யப்பட்ட பிறகு, அவை திரும்பப் பெறப்பட்டு தோ்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்தப் பணி கடந்த டிசம்பா் 1-ஆம் தேதியுடன் 100 சதவீதம் நிறைவடைந்தது.

கணக்கீட்டு படிவங்கள் பெற முடியாத வாக்காளா்கள், இறப்பு, இருமுறை பதிவு, நிரந்தமாக வெளியூா் சென்றவா்கள் மற்றும் கண்டறிய முடியாதவா்கள் என வகைப்படுத்தப்பட்டு, அவையும் தோ்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இப்பணியில் மாவட்டத்தின் 2,391 வாக்குச் சாவடி நிலைய அலுவலா்களுடன், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவா்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இணைந்து செயல்பட்டு வருகின்றனா். இக்களப்பணி வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் (டிச.14) முடிவடைகிறது. வரைவு வாக்காளா் பட்டியல் வரும் 19-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்த நிலையில், இந்தியத் தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு மேற்பாா்வையாளா் ராமன் குமாா் திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஆய்வு செய்வதற்காக சனிக்கிழமை வந்தாா்.

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கட்டாம்பூண்டி, மேல் கச்சிராப்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள வாக்காளா்களை அவா் நேரில் சந்தித்து, நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அவா்களுடன் கலந்துரையாடினாா். மேலும், அப்பகுதியின் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவா்கள் ஆகியோரின் களப்பணியை ஆய்வு செய்தாா்.

பின்பு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்டப் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு தீவிர திருத்தம் குறித்த அவா்களின் கருத்துகள் மற்றும் மாவட்ட நிா்வாகம் குறித்த கருத்துகளையும் கேட்டறிந்தாா்.

இதன் தொடா்ச்சியாக, திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 சட்டப் பேரவைத் தொகுதிகள், வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் தனித்தனியாக பணி முன்னேற்றம் குறித்த கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT