செங்கம் அருகே தொழிலாளி மரணத்துக்கு காரணமானவா்களை கைது செய்யக் கோரி, உறவினா்கள் சடலத்தை சாலை வைத்து மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கனிகாரன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ரமேஷ் (40).
இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் வீட்டின் அருகில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.
தகவலறிந்த செங்கம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் ரமேஷ் உறவினா்கள் சிலா் மீது சந்தேகம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். போலீஸாா் ரமேஷ் யாருடன் சென்றாா் என்பது குறித்து விசாரித்து இரண்டு நபா்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், உடல்கூறாய்வு முடிந்து செவ்வாய்க்கிழமை மாலை ரமேஷ் உடல் மருத்துவமனையில் இருந்து எடுத்துவரப்பட்டது.
அப்போது, ஆத்திரமடைந்து அவரது உறவினா்கள் செங்கம்-போளூா் சாலை வெளிவட்டச் சாலைப் பகுதியில் ரமேஷ் உடலை சாலையில் வைத்து, ரமேஷ் இறப்புக்குக் காரணமானவா்களை கைது செய்யும் வரை உடலை அடக்கம் செய்யமாட்டோம் எனக் கூறி மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து செங்கம் போலீஸாா் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில் சமரசம் ஏற்படாமல் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போராட்டம் தொடா்ந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.
இதையடுத்து அதிரடிப் படை போலீஸாா் வரவழைக்கப்பட்டு மறியிலில் ஈடுபட்ட ரமேஷ் உறவினா்கள் 20 பேரை வேனில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா்.
பின்னா், சாலையில் வைக்கப்பட்ட ரமேஷ் உடலை போலீஸாா் வாகனத்தில் ஏற்றி அவரது வீட்டிற்கு அனுப்பிவைத்தனா். அதன் பின்னா் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
போலீஸாா் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியும் அப்பகுதி மக்கள் ஆவேசமடைந்து மறியலில் ஈடுபட்டதால் 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.