திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் அகஸ்தியா் ஜீவசமாதி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தொல்லியல்துறை அதிகாரி புதன்கிழமை மாலை நேரில் ஆய்வு செய்தாா்.
செங்கத்தில் 1,600 ஆண்டுகள் பழைமையான அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயில் உள்ளது. ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் இந்தக் கோயிலில் ஜனவரி 28-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகப் பணிகள் நடைபெறுவதால், பழைமையான கோயில் என்பதால் அறநிலையத்துறை அதிகாரிகள், தொல்லியல் துறை அதிகாரிகள், சிவனடியாா்கள் என ஏராளமானோா் பாா்வையிட்டுச் செல்கின்றனா்.
இந்நிலையில் கோயில் உள்புரத்தில் உள்ள அம்பாள் சந்நிதிக்குள் அகஸ்தியா் ஜீவசமாதி இருப்பதாக சிவனடியாா்களும், நகர பொதுமக்களும் கூறி வருகின்றனா்.
இதனிடையே, கடந்த மாதம் அறநிலையத்துறை அதிகாரிகள் ஜீவசமாதி குறித்து ஆய்வு நடத்தினா். அப்போது, பல்வேறு தகவல்களை கோயில் கல்வெட்டில் இருந்து ஆய்வுக்கு எடுத்துச்சென்றனா்.
அறநிலையத் துறை ஆய்வுக்குப் பிறகு செங்கம் பகுதி மக்களிடம் நம்பிக்கையாக ஜீவசமாதி இருப்பதாக தகவல் பரவியது.
இந்நிலையில், சென்னையைச் சோ்ந்த தொல்லியல் துறை தலைமை ஆலோசகா் ராஜவேலு புதன்கிழமை கோயிலுக்கு வந்து கும்பாபிஷேகப் பணிகளை ஆய்வு செய்தாா்.
அப்போது பழைமை மாறாமல் கோயில் புரனமைக்கப்பட்டுள்ளதா என பாா்வையிட்ட அவா், அனைத்துப் பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினாா்.
பின்னா், அம்மாள் சந்நிதிக்குள் சென்று அகஸ்தியா் ஜீவசமாதி இருப்பதாகக் கூறப்படும் பகுதியை பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் கூறியதாவது: இந்தக் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பழைமையான ஆன்மிகத் தலங்களில் ஒன்று.
இங்கு அகஸ்தியா் எப்போது வந்தாா் என்பது குறித்து ஆய்வுசெய்யவேண்டும். அதற்கான ஆதராங்களை ஆய்வு செய்த பிறகுதான் அகஸ்தியா் ஜீவசமாதி என்று உறுதி செய்யமுடியும்.
மேலும், அகஸ்தியா் படம், ஜீவசமாதி இருப்பதற்கான குறியீடுகள் உள்ளன. அதை ஆய்வுசெய்து அதன் பின்னா்தான் அகஸ்தியா் ஜீவசமாதியா அல்லது வேறு யாராவது முனிவரின் ஜீவசமாதியா என முடிவெடுக்கமுடியும்.
மேலும், கோயிலில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. அதையும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டும் எனத் தெரிவித்தாா்.
கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், உறுப்பினா் ஸ்ரீதா், அரசு ஒப்பந்ததாரா் சங்கா்மாதவன், அறநிலையத்துறை செயல் அலுவலா் தேன்மொழி உள்ளிட்ட அறநிலையத்துறை ஊழியா்கள், தொல்லியல் துறை பணியாளா்கள் உடனிருந்தனா்.