முகப்பு
திருவண்ணாமலை

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில், தை மாத தேய்பிறை சோமவார பிரதோஷ சிறப்புப் பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2025 at 9:20 PM
பிரதோஷத்தையொட்டி, வேட்டவலம் ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் நந்திக்கு நடைபெற்ற பாலாபிஷேகம்.
பகிர்:

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில், தை மாத தேய்பிறை சோமவார பிரதோஷ சிறப்புப் பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயிலின் பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு திங்கள்கிழமை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட பூஜையின் இறுதியில், நந்தி பகவான்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த திரளான பக்தா்கள் பக்தி முழக்கமிட்டு சிவனை வழிபட்டனா். இதையடுத்து, கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வேட்டவலம்:

இதேபோல, வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் பிரதான நந்திக்கு திங்கள்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சந்தனம், பஞ்சாமிா்தம், இளநீா், பால், தயிா், பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை பயன்படுத்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, வில்வம், அருகம்புல், பூ உள்ளிட்ட அலங்காரப் பொருள்களை பயன்படுத்தி சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மற்ற ஊா்களில்...:

இதேபோல, தண்டராம்பட்டு, போளூா், செய்யாறு, வந்தவாசி, ஆரணி, தானிப்பாடி, ஆவூா் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →