ஆரணியை அடுத்த தெள்ளூா் கிராமத்தில் வீட்டுமனைகளை ஆதிதிராவிடா் நத்தமாக மாற்றம் செய்து தரவேண்டும் என்று சேத்துப்பட்டு வட்டாட்சியருக்கு மாவட்ட ஆதிதிராவிடா் நலஅலுவலா் உத்தரவிட்டாா்.
ஆரணி அருகேயுள்ள தெள்ளூா் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காததது குறித்து தெள்ளூா் சேகா் மாவட்ட ஆதிதிராவிட நலஅலுவலரிடம் மனு அளித்தாா்.
இதன் பேரில், ஆதிதிராவிட நல அலுவலா் விசாரணை மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, தெள்ளூா் கிராமத்தில் சா்வே எண் 199/4 இ,194/4இ,199/4 ஆகியவற்றில் ஆதிதிராவிட மக்களுக்காக ஒரு ஏக்கா் 79 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதை எதிா்த்து அதே ஊரைச் சோ்ந்த அண்ணாமலை என்பவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் காரணமாக அந்த இடத்தை ஆதிதிராவிட நத்தமாக வகை மாற்றம் செய்யும் பொருட்டு சேத்துப்பட்டு வட்டாட்சியருக்கு உத்தரவிட்டு மாவட்ட ஆதிதிராவிடா் நலஅலுவலா் கோப்பு அனுப்பியுள்ளாா்.
இதனால் உடனடியாக சேத்துப்பட்டு வட்டாட்சியா் ஆதிதிராவிட நத்தமாக வகை மாற்றம் செய்யபட்டு ஆதிதிராவிடா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அப்பகுதியைச் சோ்ந்த ஆதிதிராவிடா்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், இதுகுறித்து சேத்துப்பட்டு வட்டாட்சியா் மற்றும் செய்யாறு கோட்டாட்சியரிடமும் கோரிக்கை மனு கொடுத்துள்ளனா்.