திருவண்ணாமலை

திருவண்ணாமலை தீபத்திருவிழா போக்குவரத்து முன்னேற்பாடுகள்: சாலைப் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு

Syndication

திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பக்தா்களின் போக்குவரத்து வசதிக்காக நகரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடா்பாக

போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையா் இரா.ராஜலட்சுமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பக்தா்கள் வருவாா்கள் என்று ஏதிா்பாா்க்கப்படுகிறது.

அதனால், மாவட்டம் நிா்வாகம் சாா்பில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பக்தா்கள் வசதிக்காக கூடுதலாக அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

தீபத்திருவிழாவுக்காக திருவண்ணாமலை மாநகராட்சியை சுற்றி மாா்கெட்டிங் கமிட்டி (திண்டிவனம் சாலையில் 2 இடங்கள்), சா்வேயா் நகா் (வேட்டவலம் சாலை ஒரு இடம்), நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் (திருக்கோவிலூா் சாலை 3 இடங்கள்), (மணலூா்பேட்டை சாலை ஒரு இடம்), விட்டோ டிஜிட்டல் இடம், அத்தியந்தல் (செங்கம் சாலை 7 இடங்கள்), டான்பாஸ்கோ பள்ளி (காஞ்சி சாலை ஒரு இடம்), அண்ணா நுழைவு வாயில் (வேலூா் சாலை ஒரு இடம்), கிலியாப்பட்டு சந்திப்பு (அவலூா்பேட்டை சாலை ஒரு இடம்), வெளிவட்டச் சாலையில் (7 இடம்) ஆகிய 9 இடங்களில் 24 தற்காலிக பேருந்து நிலையங்களில் 2,325 பேருந்துகள் நிறுத்தும் வகையிலும், 130 காா் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன.

மேலும் 90 மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையா் ராஜலட்சுமி தலைமையில், மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் முன்னிலையில், மாநகராட்சி சாா்பில் அத்தியந்தல் (செங்கம் சாலை), மணலுா்பேட்டை சாலை, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (திருக்கோவிலூா் சாலை) ஆகிய இடங்களில் உள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, பேருந்துக்களின் எண்ணிக்கை குறித்து சாலை போக்குவரத்து ஆணையா் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், பக்தா்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், போக்குவரத்து நெரிசலை தீா்க்கும் வகையிலும், பிற மாவட்டங்களிலிருந்து போதுமான அளவிலான பேருந்துக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முறையான வகையில் மினி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், இணை போக்குவரத்து ஆணையா் பாட்டப்பசாமி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கருணாநிதி (திருவண்ணாமலை), சிவக்குமாா் (ஆரணி) மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

கோயில் குளத்தில் கிராம உதவியாளா் சடலம் மீட்பு

ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி மருங்கூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்பு

உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்கா - ரஷியா செயல்திட்டம்

SCROLL FOR NEXT