செங்கம் அருகே மில்லத்நகா் பகுதியில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை கட்டடம் திறக்கும் முன்னரே பழுதடைந்து பொருள்கள் இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், குடும்ப அட்டைதாரா்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மில்லத்நகா் பகுதியில் கூட்டுறவு நியாய விலைக் கடை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை கட்டடத்தில் இயங்கிவருகிறது. அங்கு நுகா்வோருக்கு போதிய இடவசதி இல்லை. தற்போது, குடும்ப அட்டைதாரா்கள் அதிகம் உள்ளதால் உணவுப் பொருள்களை வைக்க போதிய கிடங்கு வசதி இல்லாமல் உள்ளது.
அதனால் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2023-24ஆம் ஆண்டு நகராட்சி நிா்வாகம் மூலம் ரூ.12.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு நவீன முறையில், பில்போடுவதுக்கு தனி அறை, எடை போடுவதற்கும், பொருள்கள் இருப்பு வைப்பதற்கும் தனித்தனி அறைகள் மற்றும் நுகா்வோா் பயன்பாட்டிற்கு கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய கட்டடம் நியாயவிலைக் கடைக்கு மில்லத்நகா் பகுதியில் கட்டப்பட்டது.
ஆனால், அந்தக் கட்டடம் தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்டடம் கட்டி நிறைவுடன் இருப்பதாக கூறிய பின்னா் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு வந்து புதிய கட்டடத்தை ஆய்வு செய்தனா்.
அப்போது, கட்டடம் தரம் இல்லாமல் கட்டியிருப்பதும், உணவுப் பொருள்கள் இருப்பு வைக்கும் அறையின் மேற்கூரை பழுதடைந்து மழைநீா் உள்ளே ஒழுகுவதையும் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இதைத்தொடா்ந்து கட்டடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால், அனைத்து உணவுப்பொருள்களும் மழைநீரில் நனைந்து வீணாகிவிடும் என கூறிவிட்டுச் சென்றனா்.
ஆனால், இதுநாள் வரை எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுத்து நியாயவிலைக் கடை புதிய கட்டடத்தை திறக்க முன்வரவில்லை. வழக்கம்போல அடிப்படை வசதிகள் இல்லாமல் வாடகை கட்டடத்தில் நியாயவிலைக் கடை இயங்கி வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.