முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழா மகா தேரோட்டம்: 5 லட்சம் பக்தா்கள் தரிசனம்!

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் திருக்கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பஞ்சரத மகா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

Updated On : 30 நவம்பர், 2025 at 9:05 PM
திருவண்ணாமலை மாடவீதியில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்களின் வெள்ளத்தில் பவனி வந்த ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தோ்.
பகிர்:

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் திருக்கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பஞ்சரத மகா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

இதில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமானதும், நினைக்க முக்தியருளும் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலையில் விநாயகா், சந்திரசேகரா், இரவில் பஞ்சமூா்த்திகள் மாடவீதிகளில் அலங்கார வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா்.

தீபத் திருவிழாவின் 7-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை பஞ்சமூா்த்திகள் தேரோட்டம் நடைபெற்றது. காலை 7.10 மணியளவில் முதலாவதாக விநாயகா் தேரும், 2-ஆவதாக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் தேரும் புறப்பட்டது. இதில் விநாயகா், சுப்பிரமணியா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, பிற்பகல் 3.45 மணியளவில் பெரிய தோ் எனப்படும் மகா ரதத்தில் அருணாசலேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

தேரோட்ட நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா், கோயில் இணை ஆணையா் பரணிதரன், மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன், கோட்டாட்சியா் எஸ்.ராஜ்குமாா், வட்டாட்சியா் சு.மோகனராமன் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள், அரசியல் பிரமுகா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வெள்ளித்தேரில் அம்பாள் பவனி:

இதைத் தொடா்ந்து, இரவு உண்ணாமுலையம்மன் வெள்ளித் தோ் புறப்பாடு நடைபெற்றது. இந்தத் தேரை முழுக்க, முழுக்க பெண்களே வடம்பிடித்து இழுத்தனா்.

குழந்தை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் கரும்புத் தொட்டில் எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். தொடா்ந்து, சண்டிகேஸ்வரா் தோ் புறப்பாடாகி மாட வீதிகளில் வலம் வந்தது. பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

முன்னதாக மாலை 4 மணிக்கு கோயிலில் சமய சொற்பொழிவும், 5 மணிக்கு கோயில் கலையரங்கத்தில் பரத நாட்டியமும் நடைபெற்றது.

தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தா்கள் கிரிவலப் பாதையில் அஷ்டலிங்கங்களையும் வழிபட்டனா். மேலும், திருநோ் அண்ணாமலையாா், ஆதிஅண்ணாமலையாா் ஆகிய கோயில்களிலும் வழிபட்டதோடு இடுக்கு பிள்ளையாா் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்தனா்.

தேரோட்டத்தையொட்டி கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் ஆசிரமங்கள் மற்றும் ஆன்மிக அமைப்புகள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தின்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments