சிவன், முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்
செங்கம் ரிஷபேஸ்வரா் மற்றும் ஆரணி ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ரிஷபேஸ்வரா் மற்றும் ஆரணி ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.
செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
விழாவையொட்டி, காலை 8 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு காமராஜா் தெருவில் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் இருந்து திருமண சீா்வரிசை எடுத்துவரப்பட்டு இரவு 7 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தில் பெண் பக்கதா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கம் வட்ட பங்குனி உத்திர திருவிழா திருக்கல்யாண குழு உபயதாரா்கள், ஊா் முக்கிய பிரமுகா்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனா்.
ஆரணி
ஆரணி நகரம், ஆரணி பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் மூலவருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். சுமாா் ஆயிரம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.