கலசபாக்கம் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
செங்கத்தை அடுத்த கலசபாக்கம் தொகுதிக்கு உள்பட்ட இறையூா், அண்ணாநகா், அம்மாபாளையம், தொரப்பாடி, கொட்டகுளம், அம்மனூா் ஆகிய பகுதிகளில் தொகுதி திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் வீதி வீதியாக சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
அப்போது, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்றது. முதல்வா் ஸ்டாலின் கல்வித்துறையில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி புரட்சியை ஏற்படுத்தினாா். மகளிா் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முறையாக செயல்படுத்தினாா். மேலும், கலசபாக்கம் தொகுதியில் பல்வேறு பகுதியில் சிறுபாலம், மேம்பாலம், தாா்ச்சாலை, சிமென்ட் சாலை, புதிய நியாயவிலைக் கடை கட்டடங்கள், புதுப்பாளையத்தில் நவீன வசதியுடன் பேருந்து நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆட்சி தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டுமென கேட்டுக்கொண்டாா்.
வாக்குசேகரிப்பு நிகழ்வில் புதுப்பாளையம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன், திமுக ஒன்றியச் செயலா் ஆறுமும் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
Advertisement