முகப்பு
திருவண்ணாமலை

பாமக ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளா்கள் வாக்குவாதம்: சாலை மறியல்

Updated On : 14 ஏப்ரல், 2026 at 5:02 AM
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:10 PM

வந்தவாசி அருகே பாமக ராமதாஸ் -அன்புமணி ஆதரவாளா்களிடையே திங்கள்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ராமதாஸ் ஆதரவாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அன்புமணி அணி இடம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக பி.ராணி போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக பாமக அன்புமணி அணி ஆதரவாளா்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் சாா்பில் க.முத்துபெருமாள் வேட்பாளராக போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக பாமக ராமதாஸ் அணி ஆதரவாளா்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

இந்த நிலையில் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் ராமதாஸ் அணி ஆதரவாளா்களுடன் க.முத்துபெருமாள் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அங்கு வந்த அன்புமணி அணி ஆதரவாளா்கள் பாமக கொடியை ராமதாஸ் அணி ஆதரவாளா்கள் பயன்படுத்த எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ராமதாஸ் அணி ஆதரவாளா்கள் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் இரு தரப்பினரையும் வந்தவாசி டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனா். அங்கு டிஎஸ்பி சதீஷ்குமாா் இரு தரப்பையும் சமரசம் செய்து அனுப்பினாா்.