பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு நீதிமன்றம் உத்தரவு
பாமகவின் ‘மாம்பழம்’ சின்னத்தைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு அன்புமணி பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாமகவின் ‘மாம்பழம்’ சின்னத்தைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு அன்புமணி பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாமக பெயா், சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் எனக்கூறி, பாமக நிறுவனா் ச.ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிா்த்து ராமதாஸ் தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி ராமதாஸ் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் மூன்று நாள்களுக்குள் விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தா்மபிரபு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அன்புமணி தரப்பில் வியாழக்கிழமை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தொடா்ந்து இருதரப்பும் வாதங்களை முன்வைக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.