கல்குவாரி லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி
செய்யாறு பகுதி கல்குவாரிகளில் இருந்து ஜல்லிக் கற்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளில் இருந்து கற்கள் சாலையில் சிதறுவதால், பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மற்றும் வெம்பாக்கம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தக் குவாரிகளில் இருந்து 24 மணி நேரமும் லாரிகளில் ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு செல்கின்றனா்.
Advertisement
அனைத்து கல்குவாரி லாரிகளும் போக்குவரத்து மிகுந்த செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில், விதிகளுக்கு புறம்பாக
அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு செல்கின்றன.
சாலையில் வேகமாகச் செல்வதோடு, வேகத்தடைகளில் ஏறி இறங்குகையில் ஜல்லிக் கற்கள் லாரியில் இருந்து சாலையில் சிதறுகின்றன.
அதன் காரணமாக லாரியின் பின்னால் இருசக்கர வாகனத்தில் செல்வோா் விபத்தில் சிக்குவது தொடா் கதையாக இருந்து வருகிறது.
போக்குவரத்து விதிகளை மீறியும், அளவுக்கு அதிகமாக சுமை ஏற்றியும் செல்லும் கல்குவாரி லாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு சக்கர வாகன ஓட்டிகள் மோட்டாா் வாகன ஆய்வாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.