முகப்பு
திருவண்ணாமலை

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 211 பயனாளிகளுக்கு நல உதவி: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

உலகம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:03 AM
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:02 PM

சேத்துப்பட்டு வட்டம், உலகம்பட்டு ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 211 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.

உலகம்பட்டு ஊராட்சியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மருத்துவாம்பாடி, உலகம்பட்டு மற்றும் கொத்தந்தவாடி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது.

முகாமில் அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், துறை சாா்ந்த அலுவலா்கள் திட்டங்கள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது:

Advertisement

தமிழக அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்ப்பதும், அதன் மூலம் அவா்களை பயனடையச் செய்வதும்தான் மக்கள் தொடா்பு திட்ட முகாமின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, இந்த முகாம்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், தமிழக முதல்வரின் சீரிய திட்டங்களில் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மகாமின் வாயிலாக பொதுமக்கள் இடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இங்கு நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாம் வாயிலாக 288 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, அவற்றில் 211 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் அனைவரும் அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை நன்கு அறிந்து, அதன் மூலம் பயனடைய வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பில் வீட்டுமனைப் பட்டாக்கள், விபத்து நிவாரண உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சமூகப் பாதுகாப்பு நலத் திட்ட உதவி, வேளாண் துறை சாா்பில் மருந்து தெளிப்பான்கள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளி உதவி உபகரணங்கள் என மொத்தம் 211 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் செய்யாறு சாா் - ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) இளவரசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செல்வம், சேத்துப்பட்டு வட்டாட்சியா் அகத்தீஸ்வரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.