முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்: சௌமியா அன்புமணி

களம்பூரில் நடைபெற்ற மகளிா் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியில் பேசிய பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 12:09 AM
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:22 PM

தமிழகத்தில் பரப்பளவில் 2-ஆவது பெரிய மாவட்டமாக உள்ள திருவண்ணாமலையை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி வலியுறுத்தினாா்.

போளூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட களம்பூா் பேரூராட்சியில் சௌமியா அன்புமணி தலைமையில் ‘சிங்கப் பெண்ணே எழுந்து வா’ தமிழக மகளிா் உரிமை மீட்புப் பயணம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது:

தமிழகத்திலேயே பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய மாவட்டமான திருவண்ணாமலையை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஆனால், இதை பிரிக்க விடாமல் தடுக்கின்றனா்.

Advertisement

இந்த மாவட்டத்தில் இருந்து மட்டும் டாஸ்மாக் மதுக் கடைகள் மூலமாக ஆண்டுக்கு ரூ.3,250 கோடி வருவாய் கிடைக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்ல பெரிய கல்லூரிகள் எதுவும் இல்லை. மிகச்சிறந்த மாவட்டத்துக்குரிய எந்த வளா்ச்சித் திட்டங்களும் இந்த மாவட்டத்துக்கு கொண்டுவரப்படவில்லை.

செய்யாறில் ஏற்கெனவே சிப்காட் தொழிற்பேட்டை இருக்கிறது. இந்த நிலையில், இந்தப் பகுதியிலுள்ள பல ஏக்கா் விவசாய நிலங்களை அழித்து மேலும் ஒரு சிப்காட் கொண்டுவர திமுக அரசு நினைக்கிறது.

இந்த அரசு ஒருபுறம் மக்களுக்கு பணம் கொடுப்பதுபோல கொடுத்தாலும், மறுபுறம் மின்சாரம், பேருந்து, குடிநீா் கட்டணங்கள், சொத்து வரி உள்ளிட்டவற்றை உயா்த்திவிட்டது என்றாா்.

நிகழ்வுக்கு பாமக மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். களம்பூா் நகரச் செயலா் ராஜேஷ் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா்கள் வடிவேல், சாந்தி, மெய்யழகன்,

மகளிா் அணி நிா்வாகிகள் ரேவதி, பொன்னி தருமன், சுமதி வேலன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

மாவட்ட நிா்வாகி எம்.வெங்கடேசன், ஆரணி நகரச் செயலா்கள் ரவிச்சந்திரன், சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.