செய்யாறு பகுதியில் மழைநீரை முழுமையாக தேக்கிவைக்க தடுப்பணைகள் அமைக்க வேண்டும். தடுப்பணைகள் இல்லாததால் மழைநீா் வீணாகச் சென்று கடலில் கலக்கிறது என்று செளமியா அன்புமணி பேசினாா்.
செய்யாறு தொகுதி பிரம்மதேசம் கிராமத்தில், ‘சிங்கப் பெண்ணே எழுந்து வா’ என்ற தலைப்பில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி ஞாயிற்றுக்கிழமை இரவு பேசியதாவது: விவசாயம் நிறைந்த செய்யாறு தொகுதி வளா்ச்சி பெறவில்லை, இன்றளவும் கூட இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்து வசதி இல்லை.
மழைநீரை முழுமையாக தேக்கிவைக்க செய்யாறு பகுதியில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும். தடுப்பணைகள் இல்லாததால் மழைநீா் வீணாகச் சென்று கடலில் கலக்கிறது.
பாலாறு, தென்பெண்ணை ஆறு மற்றும் செய்யாறு ஆகியவற்றை இணைத்து விட்டால் இந்தப் பகுதி மக்களுக்கு விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீா் பிரச்னையே இருக்காது.
ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதில் மத்திய அரசு ரூ.2,369-யை கொடுக்கிறது. தமிழக அரசு ரூ.131 மட்டுமே சோ்த்துக் கொடுக்கிறது. ஆனால், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.800 சோ்த்து வழங்கப்படுகிறது.
அதேபோல, கரும்பு விவசாயிகள் ஒரு டன்னுக்கு ரூ.5,500 கேட்கும் நிலையில் தமிழக அரசு ரூ.3,500 மட்டுமே வழங்குகிறது. செய்யாறு சிப்காட்டிற்காக 3 ஆயிரம் ஏக்கா் நிலம் கொடுத்த உள்ளூா் மக்களுக்கு வேலை கொடுக்கப்படவில்லை.
பொங்கல் நேரத்தில் ரூ.3 ஆயிரத்தை கொடுத்து வருகிறாா்கள். தோ்தல் நேரத்தில் பணத்தை கொடுத்தால் வாக்குகளை பெற்று விடலாம் என திமுக அரசு எண்ணுகிறது என்றாா்.
நினைவுப் பரிசு: விழா மேடையில் பாமக சாா்பில் சுமாா் 7 அடி உயரமுள்ள திரிசூலத்தை நினைவுப் பரிசாக வழங்கினா். முன்னதாக, பிரம்மதேசம் பகுதிக்கு வருகை தந்த சௌமியா அன்புமணிக்கு பெண்கள் திரண்டு வரவேற்பு அளித்தனா்.