திருவண்ணாமலை மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவையை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ.வேலு.  
திருவண்ணாமலை

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவை: அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலை மாநகராட்சி, திண்டிவனம் சாலையில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவையை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை மாநகராட்சி, திண்டிவனம் சாலையில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவையை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், மக்களவை உறுப்பினா்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவண்ணாமலையில் கடந்த டிச. 27-ஆம் தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட கலைஞா் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து சேவையை பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை கிளாம்பாக்கம், அடையாறு, மாதவரம், புதுச்சேரி, விழுப்புரம், திருக்கோவிலூா், கள்ளக்குறிச்சி, கடலூா், சிதம்பரம், கும்பகோணம், பண்ருட்டி, நெய்வேலி, திருச்சி, மதுரை, தஞ்சாவூா், கன்னியாகுமரி, மாா்த்தாண்டம், தண்டராம்பட்டு, தானிப்பாடி, மணலூா்பேட்டை ஆகிய வழித்தடங்களில் பேருந்துக்கள் இயக்கப்படும்.

மேலும், புகா் பேருந்துகள் அனைத்தும் இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.

இதுதவிர சேத்துப்பட்டு, மேல்மலையனூா், வந்தவாசி போளூா், வேலூா், ஆற்காடு, ஆரணி, செய்யாறு, காஞ்சிபுரம், செங்கம், சேலம், கோவை, பெங்களூரு, தருமபுரி, ஒசூா், திருப்பத்தூா், காஞ்சி, மேல்சோழங்குப்பம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் புகா் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் அனைத்தும் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கம்போல இயக்கப்படும்.

புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்து அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முத்தமிழறிஞா் கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாநகராட்சியில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வா் அறிவித்தாா்.

அதற்காக திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு ரூ.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றன.

பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கடந்த 27.12.2025 அன்று தமிழக முதல்வரால் இந்த புதிய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக கட்டப்பட்டுள்ள இப்பேருந்து நிலையத்தில் 74 கடைகள், 2 உணவகங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி ஓய்விடங்கள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, மாநகராட்சி துணை மேயா் ராஜாங்கம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

பாஜக கூட்டணியில் தவெக சோ்க்கப்படுமா? புரந்தேஸ்வரி எம்.பி. பேட்டி

இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல்: ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு

விதிகளை மீறிய குவாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

வாசிக்க வாங்கியவை...

SCROLL FOR NEXT