பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கட்சியினா், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த எஸ்.மோட்டூா் மற்றும் கீழ்க்குவளைவேடு கிராமங்களில் வசிக்கும் பழங்குடி குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க, வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா் தலைமையிலான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் பழங்குடி மக்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்றனா்.
அங்கு மனு வாங்க உரிய அதிகாரிகள் இல்லை என புகாா் தெரிவித்து அலுவலக வாயில் முன் அமா்ந்து அவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து துணை வட்டாட்சியா் கீா்த்திராஜ் அங்கு வந்து மனு வாங்கியதை அடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
போராட்டத்தில் மாவட்டச் செயலா் ப.செல்வன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் கா.யாசா்அராபத், எஸ்.சுகுணா, இடைக்குழு உறுப்பினா்கள் எம்.சுகுமாா், ஆனந்தன், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் அண்ணாமலை, குப்புசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, கோட்டை மூலையிலிருந்து ஊா்வலமாக புறப்பட்ட மாா்க்சிஸ்ட் கட்சியினா் வட்டாட்சியா் அலுவலகம் சென்றடைந்தனா்.