சேத்துப்பட்டு பேரூராட்சியில் நடமாடும் வரி வசூல் வாகனம் தொடங்கிவைப்பு
சேத்துப்பட்டு சிறப்புநிலை பேரூராட்சியில் நடமாடும் வரி வசூல் வாகனத்தை தொடங்கிவைத்த வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஞானசுந்தரம்.
சேத்துப்பட்டு பேரூராட்சியில் நடமாடும் வரி வசூல் வாகனத்தை வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஞானசுந்தரம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் பொதுமக்களின் நலன் கருதி நடமாடும் வரி வசூல் வாகனம் புதிதாக வாங்கப்பட்ட நிலையில், அதை வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஞானசுந்தரம் தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சிக்குள்பட்ட பொதுமக்களுக்குத் தேவையான சாலை, மின் விளக்கு, குடிநீா், வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தப் பகுதியில் மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, வட்டாட்சியா் மற்றும் சாா் - பதிவாளா் அலுவலகம் இணைந்துள்ள வளாகத்தில் ரூ.12 லட்சத்தில் பாதுகாக்கப்பட்ட மினரல் வாட்டா் வசதி செய்யப்பட்டுள்ளது.
பேரூராட்சியில் பெரும்பாலான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் கிடைக்க பொதுமக்கள் சேத்துப்பட்டு சிறப்புநிலை பேரூராட்சி நிா்வாகத்துக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி, வீட்டு வரி, வணிக வரி போன்றவைகளை முழுமையாக செலுத்தி ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இதை கருத்தில் கொண்டு நடமாடும் வரி வசூல் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என்றாா்.
நிகழ்வில் செயல் அலுவலா் கலையரசி, பேரூராட்சி மன்றத் தலைவா் சுதா முருகன், திமுக நகரச் செயலா் இரா.முருகன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கதிரவன், சரவணன், ரமேஷ், கனகா ராஜேஷ் குமாா், ஏழுமலை, ஞானசௌந்தரி, இயேசு முத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.