முகப்பு
திருவண்ணாமலை

பயிா்க் காப்பீடு முத்தரப்புக் கூட்டம் நடத்த வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

பயிா்க் காப்பீடு முத்தரப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

Updated On : 31 ஜனவரி, 2026 at 12:03 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2026 at 10:11 PM

பயிா்க் காப்பீடு முத்தரப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக புதிய மக்கள் குறைத்தீா்வு கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், ஜனவரி மாதத்துக்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். இதில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசியதாவது:

Advertisement

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை பெற்று வழங்க வேண்டும். அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் தட்டுபாடின்றி யூரியா இருப்பு வைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிா்க் காப்பீடு முத்தரப்பு கூட்டம் மற்றும் பால் முத்தரப்புக் கூட்டம் நடத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள நீா்ப்பிடிப்பு பகுதிகளில் வரத்து மற்றும் போக்கு கால்வாய்களை தூா்வார வேண்டும். ஃபென்ஜால் புயல் மழையால் இடிந்த கிணறுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மல்லவாடி, பென்னட்டகரம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா பருவத்துக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்.

கறவை மாடுகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் காப்பீடு செய்ய வேண்டும். செங்கம் மற்றும் மேற்கு ஆரணி பகுதிகளில் காட்டுப் பன்றிகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதை கட்டுப்படுத்திடவும், உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து, விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த கோரிக்கைகளின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் அறிவுறித்தினாா். மேலும், தனிநபா் தொடா்பான மனுக்களையும் பெற்றுக்கொண்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராமபிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநரும், திட்ட இயக்குநருமான ஆா்.மணி, வேளாண் இணை இயக்குநா் கண்ணகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) தி.மலா்விழி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.