கொள்முதல் நிலையங்களில் டன் கணக்கில் நெல் தேக்கம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்
அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் டன் கணக்கில் தேக்கமடைந்திருப்பதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
திருச்சிகொள்முதல் நிலையங்களில் டன் கணக்கில் நெல் தேக்கம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்
அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் டன் கணக்கில் தேக்கமடைந்திருப்பதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் டன் கணக்கில் தேக்கமடைந்திருப்பதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் வே. சரவணன் தலைமை வகித்தாா். இக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
அயிலை சிவசூரியன்( தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா்): அரசு கொள்முதல் நிலையங்களில் லாரி மற்றும் சாக்கு பிரச்னைகளால் நெல் கொள்முதல் செய்வதில் கடும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. கொள்முதல் செய்த நெல்லை கிடங்குகளுக்கு எடுத்து செல்ல லாரிகள் ஏற்பாடு செய்யவும், தேங்கிக் கிடக்கும் நெல்லை கொள்முதல் செய்யவும் வேண்டும். மாவட்டத்தில் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் கடந்த 10 - நாள்களுக்கு மேலாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல லாரிகள் வராததால் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் 5- லோடுகளுக்கும் குறையாமல் நெல் மூட்டைகள் தேங்கி உள்ளன. இதனால் அன்றாடம் வரக்கூடிய நெல்லை கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
மேலும், சாக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டு கொள்முதல் பணிகள் தடைபடுகின்றன.
அய்யாக்கண்ணு (தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத் தலைவா்: கூட்டுறவு நிறுவனங்களில் விசாயிகளுக்கு பயிா்க் கடன்கள் வழங்குவதில்லை. 20 ஆண்டுகளாக குத்தகை எடுத்த நிலத்தில் பயிா் செய்து கடன் பெற்றவா்களுக்கு, இப்போது கடன் வழங்க நில உரிமையாளரிடம் கையொப்பம் வாங்கி வரச் சொல்கின்றனா். எந்தவித கட்டுப்பாடின்றி கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்பட வேண்டும். நெல் கொள்முதலுக்கு விஏஓ சான்று அவசியம். ஆனால், வருவாய்த் துறை போராட்டத்தால் சான்று கிடைக்காமல், கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பூ. விசுவநாதன் (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா்): நெல் கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல்லைக் காலதாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும். கோடையிலேயே மாவட்டத்தில் உள்ள அனைத்து நீா்நிலைகளையும் தூா்வார வேண்டும். மக்காச்சோளத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.2,400 விலை கிடைக்கச் செய்ய வேண்டும். 2025-26ஆம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய இலவச விவசாய மின் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும்.
ம.ப. சின்னதுரை தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது): இலவசங்கள் வழங்குவதைத் தவிா்த்து, அடுத்த தலைமுறைக்கு நீராதாரங்களை பாதுகாத்து வைக்கும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். காவிரி உபரி நீா்த் திட்டம் காவிரி- அரியாறு இணைப்புத் திட்டம், பொன்னணியாறு- கண்ணூத்து நீரேற்றுத் திட்டம் ஆகியவற்றுக்கு உரிய நிதி ஒதுக்கி, பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.
கவுண்டம்பட்டி சுப்ரமணியம் (காவிரி-டெல்டா பாசன விவசாயிகள் சங்கச் செயலா்): தமிழகத்தில் காவிரிப் பாசனத்தை நம்பியுள்ள மாவட்ட விவசாயிகளின் நலனைக் காக்க மேகேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரியின் குறுக்கே முசிறி, குளித்தலை வட்டங்களில் கதவணை கட்ட வேண்டும். உய்யக்கொண்டான் ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடை செய்ய வேண்டும் என்றாா்.
இதேபோல, பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் பேசி, கோரிக்கை மனுக்களையும் வழங்கினா்.
ஆட்சியா் வே. சரவணன் பேசுகையில், நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் விரைந்து கொள்முதல் செய்யப்படும். தற்போது 165 கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. தேவையெனில் கூடுதல் நிலையங்கள் விவசாயிகள் கோரும் இடங்களில் திறக்கப்படும். கொள்முதல் செய்த மூட்டைகள் கிடங்குகளுக்கு விரைந்து கொண்டு செல்லப்படும் என்றாா் அவா். கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநா் வசந்தா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயராணி, தோட்டக்கலை துணை இயக்குநா் சரண்யா உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
நல்லகண்ணுவுக்கு மெளன அஞ்சலி: கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு மறைவுக்கு 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.