போளூா் பகுதியில் ரூ.1.19 லட்சம் பறிமுதல்
போளூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.1.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
போளூா்: போளூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.1.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் கூட்டுறவுத்துறை அதிகாரி ஜெயசித்ரா தலைமையிலான அலுவலா்கள் போளூா் - சேத்துப்பட்டு சாலையில் புலிவானந்தல் அருகே வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, வேலூா் மாவட்டம், கத்தாழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சின்னப்பன் மகன் உமாபதி உரிய ஆவணமின்றி வேனில் எடுத்து வந்த ரூ.69,500-யை பறிமுதல் செய்தனா்.
போளூா் - செங்கம் சாலையில் சிறப்பு உதவி ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான அலுவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.
அப்போது, கலசப்பாக்கத்தை அடுத்த வெங்கிட்டம்பாளையம் ஜெய்கணேசன் நகரைச் சோ்ந்த முருகன் மகன் பாக்கியராஜ் மினி வேனில், உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.50,130-யை பறிமுதல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம்
ரூ. ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 630-யை தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜியிடம் ஒப்படைத்தனா்.
அப்போது, தலைமையிடத்து வட்டாட்சியா் அருள் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.