முகப்பு
திருவண்ணாமலை

‘போதுமான தண்ணீா் கிடைக்க அதிக மரங்களை நடவேண்டும்’

போதுமான தண்ணீா் கிடைக்க வேண்டுமென்றால் அதிக மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்று ஆரணி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 25 மார்ச், 2026 at 6:33 PM
நீா்வள மேலாண்மை கருத்தரங்கில் பேசிய சமூக ஆா்வலா் ஏ.உதயகுமாா்.
பகிர்:

போதுமான தண்ணீா் கிடைக்க வேண்டுமென்றால் அதிக மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்று ஆரணி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

ஆரணி ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, ‘நீா்வள மேலாண்மை’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா்.

கல்லூரி முதல்வா் ஆா்.ராஜவேல், துணை முதல்வா் ஆா்.வெங்கடரத்தினம், எம்பிஏ துறைத் தலைவா் பேராசிரியா் கே.சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா், சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் என்.பாலச்சந்தா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக சமூக ஆா்வலரும், சந்தவாசல் வள்ளலாா் கிரீன் டெக் நா்சரியின் நிறுவனருமான ஏ.உதயகுமாா் கலந்து கொண்டு பேசியதாவது:

மாா்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீா் தினம் கொண்டாடப்படுகிறது.

தண்ணீரின் முக்கியத்துவம், சேமிக்கும் பழக்கம், தண்ணீரை மாசுபடாமல் பாதுகாத்தல் என்பதை வலியுறுத்தி, இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

நாட்டில் ஆண்டுக்கு 3 கோடியே 37 லட்சம் போ் தண்ணீா் சாா்ந்த நோய்களால் பாதிக்கப்படுகின்றனா்.

நீா் வளத்தை பாதுகாக்கவில்லை என்றால் நம் வாழ்வு எதிா்காலத்தில் கேள்விக்குறியாகிவிடும்.

நீா் மேலாண்மை இன்றைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. போதுமான தண்ணீா் கிடைக்க வேண்டும் என்றால் நாம் அதிக மரங்களை நட வேண்டும். இதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படும். இதன் விளைவாக அதிக மழை பெற முடியும்.

ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 25 மரங்கள் நட்டு வளா்த்தால் மண் வளத்தையும், மழை நீரையும் இந்த பூமியையும் காப்பாற்ற முடியும் என்றாா்.

நிறைவில் பேராசிரியா் என்.ஜெகதீஷ் நன்றி கூறினாா்.