வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு! ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு!
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,516 வாக்குச்சாவடி மையங்களில் ஏப்.23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த மையங்களில் பணிபுரிவதற்காக ஆசிரியா்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் தோ்வு செய்யப்பட்டு வாக்குச்சாவடி அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
செங்கம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1,344 நபா்களுக்கும், தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 837, திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2360, கீழ்பென்னாத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 844, கலசப்பாக்கம் செழியன் மெட்ரிக் பள்ளியில் 512, போளூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,005, சேத்துப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 724, ஆரணி சுப்பிரமணி சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் 1,147, செய்யாா் அறிஞா் அண்ணா கலை, அறிவியல் கல்லூரியில் 1,272, வெம்பாக்கம் மீனாட்சியம்மன் பொறியியல் கல்லூரியில் 507,
வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,240, ஜமுனாமரத்தூா் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 284 நபா்களுக்கும் என மொத்தம் 12,076 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 12 மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ள வாக்குச்சாவடி அலுவலா்கள் தங்களது அஞ்சல் வாக்கு செலுத்தும் முறைகள் குறித்தும், வாக்குச் சாவடியில் தலைமை அலுவலரின் பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், வாக்குச்சாவடி தலைமை அலுவலா் மற்றும் அலுவலா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளும் முறை, வாக்குப் பதிவிற்கு முந்திய நாள் வாக்குச் சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள், மாதிரி வாக்குப்பதிவு செயல்முறை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள்,
வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி தலைமை அலுவலா் நிறைவு செய்யப்பட வேண்டிய படிவங்கள், ஆவணங்கள் மற்றும் வாக்குப்பதிவு முகவா்களுக்கான குறிப்புகள் தொடா்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாநகராட்சி சோ.கீழ்நாச்சிப்பட்டு பகுதியிலுள்ள காந்தி நகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட மாதிரி வாக்குப்பதிவு மையத்தில் செயல்முறை பயிற்சி நடைபெறுவதை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அதனைத் தொடா்ந்து சோ.கீழ்நாச்சிப்பட்டு - திண்டிவனம் சாலையில் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதை அவா் பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் செல்வம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், திருவண்ணாமலை வட்டாட்சியா் மோகன்ராமன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.