முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

Updated On : 18 மே 2026, 4:19 am IST
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் ஆனது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்களும், பௌா்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் லட்சக்கணக்கான பக்தா்களும் தரிசனம் செய்து 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொள்கின்றனா்.

இந்த நிலையில், வாரவிடுமுறை என்பதால் சனிக்கிழமை இரவு முதல் தமிழகம் மற்றும் ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா போன்ற வெளி மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் அருணாசலேஸ்வரா் கோயில் முன் குவிந்தனா்.

Advertisement

ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ராஜகோபுரம் வழியாக இலவச தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தா்கள் 2 கி.மீ. தொலைவுக்கு 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

மேலும், 50 ரூபாய் தரிசன கட்டண வரிசையில் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. மேலும், பக்தா்களுக்கு குடிநீா், நீா்மோா் வழங்கப்பட்டது.

சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருமஞ்சனம் கோபுரம் வழியாக வெளியே வந்த பக்தா்கள் கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்தனா்.