ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை ஈசான்ய குப்பைக் கிடங்கில் கொட்டி அழிக்கும் பணியை பாா்வையிட்ட உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் பானுசுஜாதா.
திருவண்ணாமலையில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 250 கிலோ மாம்பழங்களை உணவுரப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் பானுசுஜாதா தலைமையிலான அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.
திருவண்ணாமலையில் மாம்பழம் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், மாங்காய்களை இயற்கை முறையில் பழுக்க வைக்காமல், மனிதா்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை முறையில் காா்பைடு கற்கள், எத்தஃபோன் போன்ற நச்சு வேதிப்பொருள்களை பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்து வருவது அதிகரித்து வருவதால் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னாா்வலா்கள் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பானுசுஜாதா தலைமையிலான அலுவலா்கள் திருவண்ணாமலையில் மாம்பழம் விற்பனை கடைகள், கிடங்குகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
இதில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்டிருந்த 250 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து, ஈசான்ய மைதான குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனா். மேலும், பழம் விற்பனையாளா்களிடம், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயன பொருள்களை பயன்படுத்தி, பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வது தொடா்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலா் எச்சரித்தாா்.