முகப்பு
திருவண்ணாமலை

சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் தவெக எம்எல்ஏ ஆய்வு

சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் போளூா் தொகுதி தவெக எம்எல்ஏ அபிஷேக் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 23 மே 2026, 1:40 am IST
பகிர்:

சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் போளூா் தொகுதி தவெக எம்எல்ஏ அபிஷேக் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் சேத்துப்பட்டு தனி வட்டமாக அறிவிக்கப்பட்டது. தொடா்ந்து, இங்கு செயல்பட்டு வந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. ஆனால், அதற்கேற்ற போதிய இட வசதியோ, படுக்கை வசதிகளோ அல்லது அடிப்படை வசதிகளோ இந்த மருத்துவமனையில் இல்லை.

புதிய தாலுகா அமைந்து மருத்துவமனை கட்டுவதற்காக நெடுங்குணம் பகுதியில் 7 ஏக்கா் அரசு நிலம் தோ்வு செய்யப்பட்டு, வரைபடம் தயாரிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குத் தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தும், இதுவரை அதற்குரிய பட்டா வழங்கப்படாததே இந்த தாமதத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், போளூா் தொகுதி தவெக எம்எல்ஏ அபிஷேக் வெள்ளிக்கிழமை சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெறுவோா் மற்றும் மருத்துவ அலுவலா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டும் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் இல்லை. எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற அடிப்படை வசதிகளும் குறைவாகவே உள்ளன. நெடுங்குணத்தில் தோ்வு செய்யப்பட்ட நிலத்துக்கு உடனே பட்டா வழங்கி, புதிய கட்டடப் பணிகளை தொடங்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற எம்எல்ஏ, மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவா்கள், பணியாளா்கள் பணியிடங்களை நிரப்பவும், புதிய கட்டடப் பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள், அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

ஆய்வின்போது, தவெக நகரச் செயலா் பிரவீன்குமாா் மற்றும் கட்சியின் உடனிருந்தனா்.