நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய சேவையை மக்கள் பயன்படுத்த வேண்டும்
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயர் மருத்துவ சேவைகளை அளிக்கும் வகையில் இந்த அரசு பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. பொதுமக்கள் இவற்றின் சேவையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயர் மருத்துவ சேவைகளை அளிக்கும் வகையில் இந்த அரசு பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. பொதுமக்கள் இவற்றின் சேவையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் கேட்டுக்கொண்டார்.
காட்பாடியை அடுத்த தாராப்படவேட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அவர் சனிக்கிழமை திறந்து வைத்துப் பேசியது:
தமிழகத்தில் 135 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இவற்றில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ஆண்டுக்கு ரூ.14.91 கோடியும், மருத்துவ உபகரணங்கள், மாத்திரைகள் வாங்குவதற்கு ரூ.1.84 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர், மருந்தாளுநர், ஆய்வக நுட்புனர், பெண் செவிலியர் உதவியாளர், மருத்துவமனை பணியாளர் போன்றவர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பிரசவம் பார்த்தல், தடுப்பூசிகள் போடுதல், புறநோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை, காசநோய், தொழுநோய் போன்றவற்றுக்கு தொடர் சிகிச்சை, சர்க்கரை நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் இதர பரிசோதனைகள் செய்யும் வசதியை இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெற்றுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, குடியாத்தம், அரக்கோணம், வாலாஜாபேட்டை, ஆர்க்காடு, சத்துவாச்சாரி, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் ஏற்கெனவே நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
விரைவில் பேர்ணாம்பட்டிலும் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட உள்ளது என்றார் அமைச்சர்.
விழாவுக்கு ஆட்சியர் பொ.சங்கர் தலைமை தாங்கினார். மேயர் பி.கார்த்தியாயினி, துணை மேயர் தருமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.