முகப்பு
வேலூர்

அரக்கோணத்தில் தலைவிரித்தாடும் குடிநீர்த் தட்டுப்பாடு

அரக்கோணம் நகரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

அரக்கோணம் நகரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது.

வேலூர் மாவட்டத்தில் நீர்வரத்து அதிகம் உள்ளது அரக்கோணம் நகராட்சியாகும். இருந்தும் தற்போது பஞ்சம் ஏற்படுவதற்குக் காரணம் குடிநீர் வரத்து குறைந்து போனதா அல்லது விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியா என அறிய முடியாத நிலை நீடிக்கிறது.

அரக்கோணம் நகருக்கு கடந்த 1939-இல் கல்லாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து குடிநீர்த் தேவை அதிகரித்த காலங்களில் புதுசேகாவரம், தக்கோலம், காஞ்சிபுரம் மாவட்டம் புரிசை ஆகிய இடங்களில் குசஸ்தலை ஆற்றுப் படுகைகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு சுமார் 16 கி.மீ. தொலைவுக்கு குடிநீர்க் குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

மேலும் குடிநீர்த் தேவை அதிகரித்ததை அடுத்து, காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் ஊராட்சி அருகே பாலாற்றில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அரக்கோணம், திருத்தணி ஆகிய இரு நகராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வேலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் தற்போது அரக்கோணம் நகராட்சி சேர்க்கப்பட்டு அதன் மூலமும், காவிரியில் இருந்தும் நகருக்கு குடிநீர் கொண்டு வரப்பட உள்ளது.

குறிப்பாக தினமும் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என தமிழ்நாடு குடிநீர் வாரியத்தால் தெரிவிக்கப்பட்ட திருப்பாற்கடல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தற்போது தினமும் 8 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.

தக்கோலத்தில் இருந்து தினமும் 12 லட்சம் லிட்டரும், கல்லாற்றில் தற்போது புதியதாக போடப்பட்ட மூன்று ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்ட பழைய கிணறுகளில் இருந்து 4 லட்சம் லிட்டர் தண்ணீரும் அரக்கோணம் நகருக்குக் கிடைக்கிறது. ஆக சராசரியாக தினமும் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்தும் நகரில் கடும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர், 7, 8, 9, 10, 11, 12, 13 ஆகிய வார்டுகளுக்கு தற்போது 8 முதல் 12 நாள்களுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் குடிநீர்

விநியோகிக்கப்படுகிறது. இதேபோல், சுவால்பேட்டையில் 16, 17, 18, 19, 20 ஆகிய வார்டுகளுக்கு 10 முதல் 12 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது.

ஆனால், இதே வார்டுகளில் சில தெருக்களில் குறிப்பாக நகர முக்கியப் பிரமுகர்கள் இருக்கும் தெருக்களில் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்குவதும் நடைபெறுகிறது. பழனிபேட்டை பகுதியில் 24, 29, 30, 31 ஆகிய வார்டுகளுக்கு 8 முதல் 12 நாள்களுக்கு ஒரு முறையும், 32, 33 ஆகிய வார்டுகளுக்கு 15 நாள்களுக்கு ஒரு முறையும் குடிநீர் வழங்கப்படுகிறது.

மேலும், 25, 27, 28, 35, 36 ஆகிய வார்டுகளுக்கும் இதே நிலை இருந்து வருகிறது. விண்டர்பேட்டை 26-ஆவது வார்டிலும் 10 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் நகரின் 27-ஆவது வார்டு மக்கள் தங்களது பகுதிக்கு தண்ணீர் வந்து 20 நாள்கள் ஆவதாகத் தெரிவித்து நகராட்சி முன்பு பானை உடைப்புப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

நகரின் மொத்த தண்ணீர் தேவை நாளொன்றுக்கு 75 லட்சம் லிட்டர்கள் என நகராட்சி பொறியியல் துறை கணித்துள்ள நிலையில், தினமும் 25 லட்சம் லிட்டர் கிடைக்கையில் நகராட்சி அதிகாரிகளால் மூன்று நாள்களுக்கு ஒரு முறை நகரம் முழுவதற்கும் தண்ணீர் தரமுடியவில்லை.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நகரில் குடிநீர் விநியோகம் சீராக நடைபெறுவது இல்லை. நகர முக்கியப் பிரமுகர்கள் நகராட்சி குடிநீர் வழங்கல் துறையினரை மிரட்டி தங்களது பகுதிக்கு அடிக்கடி குடிநீர் வழங்கும்படி நிர்பந்திக்கின்றனர். மேலும் பல இடங்களில் குழாய்கள் சீராக இல்லாததால் 25 சதவீதம் குடிநீர் வீணாகிறது.

தக்கோலம், கல்லாறு நீரேற்றும் நிலையங்களில் இருந்து வரும் குடிநீர் சீராக வருவதில்லை. ஒரு நாள் குறையும், ஒரு நாள் அதிகரிக்கும். அங்கு உள்ள இயந்திரங்களுக்கு அடிக்கடி செலவுக் கணக்குகள் காட்டப்படுகிறதே தவிர இயந்திரங்கள் சரிப்படுத்தப்படவில்லை.

நகரில் விநியோகத்தின் போது பல வீடுகளில் குறிப்பாக 50 சதவீதம் வீடுகளில் மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் நிறைத்து விடுகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கச் சென்றால் அப்பாவிகள் மாட்டிக் கொண்டு தங்களது மோட்டார்களை இழக்கின்றனர்.

கடந்த முறை சோதனை நடவடிக்கைகளின் போது பறிமுதல் செய்யப்பட்ட மின் மோட்டார்கள் அந்தந்த உரிமையாளர்களிடம் பத்திரமாக திருப்பி அளிக்கப்பட்டு விட்டது.

இப்படி இருந்தால் குடிநீர் எப்படி அனைத்து வீடுகளுக்கும் சீராக விநியோகிக்க இயலும் என்றார்.

இதுகுறித்து அரக்கோணம் நகராட்சி ஆணையர் விஜயகுமாரியை கேட்டபோது அவர் கூறியதாவது:

குடிநீர்ப் பஞ்சத்துக்குக் காரணம் நீர்வரத்து குறைந்து போனதும், விநியோகத்தில் இருக்கும் குளறுபடிகளும்தான். நீர்வரத்து குறைந்து போனது குறித்து எங்களது மேலதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கிறோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனக் காத்திருக்கிறோம். விநியோகக் குளறுபடி குறித்து நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார்.

நகர் மன்றத் தலைவர் கண்ணதாசனிடம் கேட்டபோது, அரக்கோணம் நகராட்சிக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. தற்போது தினமும் 25 லட்சம் லிட்டர் வருகிறது.

அடுத்த 10 நாளில் விநியோகத்தை சீர்படுத்தி நகர் முழுவதும் ஒரே மாதிரியான குடிநீர் விநியோகம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இருந்தும் இல்லை...

அரக்கோணம் மணியக்காரத் தெருவில் 3 மாதங்களுக்கு முன் மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தரப்பட்டது. மின் இணைப்பு வழங்க காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன் மின் இணைப்பும் வழங்கப்பட்டு விட்டது. எனினும், மோட்டாருக்கு மின் இணைப்பு தராததால் அந்த ஆழ்துளைக் கிணறு இயங்காத நிலையிலேயே உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.