முகப்பு
வேலூர்

ஆண்டுக்கு ரூ. 35 கோடி வருவாய் அளித்தும்... அடிப்படை வசதிகள் இல்லாத அரக்கோணம் ரயில்வே சந்திப்பு

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 35 கோடி வருவாய் ஈட்டித் தரும் பிரதானமான ரயில் நிலையம் அரக்கோணம் ரயில்வே சந்திப்பு ஆகும். ஆயினும் இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:28 AM
பகிர்:

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 35 கோடி வருவாய் ஈட்டித் தரும் பிரதானமான ரயில் நிலையம் அரக்கோணம் ரயில்வே சந்திப்பு ஆகும். ஆயினும் இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை.

இந்திய ரயில்வேயின் மூன்றாவது ரயில்பாதையாக அமைக்கப்பட்ட ராயபுரம்- வாலாஜாபேட்டை ரயில் தடத்தின் முக்கியமான, மிகவும் பழைமையான ரயில்வே சந்திப்பு அரக்கோணம்.

சென்னையில் இருந்து மும்பை, திருவனந்தபுரம், மங்களூர், பெங்களூரு, கோயம்புத்தூர் நோக்கிச் செல்லும் அனைத்து ரயில்களும் அரக்கோணத்தில் தான் பிரிந்து செல்லும். மேற்கிந்தியப் பகுதிகளில் இருந்து தென் தமிழ்நாடு நோக்கிச் செல்ல வேண்டிய ரயில்களும் அரக்கோணத்தில் பிரிந்து செங்கல்பட்டு வழியே செல்லும்.

அரக்கோணம் தற்போது சென்னை மாநகரின் புறநகராகவும் மாறியிருப்பதால், சென்னைவாசிகள் விரும்பிக் குடியேறும் பகுதியாக உள்ளது. எனவே, தினமும் லட்சக்கணக்காணோர் பயணம் செய்யும் மிக முக்கியமான வழித்தடமாக அரக்கோணம் - சென்னை மார்க்கம் மாறியுள்ளது.

அரக்கோணம் ரயில்நிலையத்தில் தினமும் சராசரியாக ரூ. 10 லட்சம் வருவாய் ஈட்டப்படுகிறது. ஆண்டுக்கு ரூ. 35 கோடி வருவாய் ஈட்டித் தந்தாலும், அரக்கோணம் ரயில்நிலையத்தின் பராமரிப்பு, அடிப்படை வசதிகள் மிகவும் குறைவே.

சில ஆண்டுகளுக்கு முன் அரக்கோணம் ரயில்நிலையத்தில் இருந்து திருவள்ளூர் ரயில்நிலையம் வரை மூன்றாவது, நான்காவது இருப்புப்பாதைகள் அமைக்கும் பணிகள் தொடங்கின. சுமார் 30 கி.மீ. தொலைவுள்ள இந்தப் பகுதியில், இடைப்பட்ட இடங்களில் இருப்புப்பாதை அமைக்கப்பட்டாலும், சில இடங்களில் அமைக்கப்படவில்லை. இந்த இருப்புப்பாதை பணிகள் 75 சதவீதம் முடிவடைந்த நிலையில், தற்போது பணிகள் மிகவும் மெத்தனமாக நடைபெற்று வருகின்றன.

அரக்கோணம் ரயில்நிலையத்தின் நடைமேடைகள் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரி அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினர் போராடியதால், இரு ஆண்டுகளுக்கு முன் ரயில்நிலைய நீட்டிப்புப் பணிகள் தொடங்கின. ஆனால், அந்தப் பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டு விட்டன.

சென்னையில் இருந்து அரக்கோணம் வழியே, காஞ்சிபுரம்- செங்கல்பட்டு- தாம்பரம் மார்க்கத்தில் சென்று, மீண்டும் சென்னையை அடையும் சுழற்சி ரயில் திட்டத்துக்கான பணிகள் ஏற்கனவே ரயில்வே இணையமைச்சராக ஆர்.வேலு இருந்த காலத்தில் தொடங்கப்பட்டு, பணிகள் 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், தற்போது கிடப்பில் போடப்பட்டுவிட்டன. இந்தப் பணிக்காக ஐஎன்எஸ் ராஜாளி நிர்வாகம் போதிய தொகையை அளித்த நிலையிலும் இப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னை- அரக்கோணம் இடையே செல்லும் மின்சார ரயில்களை 12 பெட்டிகள் கொண்டவையாக மாற்ற வேண்டும் என்று பல முறை கோரியும், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. "இந்த மார்க்கத்தில் இடைப்பட்ட ரயில்நிலையங்களிலும் நடைமேடைகள் போதிய அளவில் இல்லை. அவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. அது முடிவடைந்ததும் 12 பெட்டிகளாக விஸ்தரிக்கப்படும்' என்ற பதிலை கடந்த மூன்று வருடங்களாக ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

எல்லா ரயில்நிலையங்களிலும் நடைமேடைகள் ஒன்றை அடுத்து ஒன்று என தான் அமைக்கப்படும். ஆனால் எங்கும் இல்லாத நிலையில் அரக்கோணம் ரயில்நிலையத்தில் மட்டும் ரயில்நிலையத்தில் 5 நடைமேடைகள் இருக்கும் நிலையில், 2 நடைமேடைகள் ரயில்நிலையப் பகுதியில் இருந்து ஆயிரம் மீட்டருக்கு அப்பால் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்குச் செல்ல சரியான வழியும் அமைக்கப்படவில்லை.

மேலும் ரயில்நிலையத்தின் தெற்குப் பகுதியில் மற்றொரு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகளில் காணப்பட்டாலும், முழுமையான நடைமேடை இல்லை.

இந்த நடைமேடையின் அருகே சுற்றுவட்டாரப் பகுதிகளின் கழிவுநீர்க் கால்வாய்கள் செல்வதாலும், அப்பகுதி சுகாதாரமின்றி இருப்பதாலும், இந்த நடைமேடையில் ரயிலுக்குக் காத்திருப்போர் அவதிப்படுகின்றனர். இங்கு பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையும் காணப்படுகிறது.

ரயில்நிலையத்துக்கு வரும் ரயில் பயணிகளுக்கான கழிப்பறைகள் நிலையத்தின் 4 பகுதிகளில் கட்டப்பட்டாலும், சாதாரணப் பயணிகளுக்கு இரு இடங்களிலும், மேல்வகுப்பு பயணிகளுக்கு ஓரிடத்திலும் அதுவும் கட்டண கழிப்பறையாகத் தான் உள்ளன. கட்டணம் வசூலிப்போர் அந்தக் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பதில்லை. நிலைய சுகாதார அலுவலகமும் இதைக் கண்டுகொள்வதில்லை.

அனைத்து ரயில்நிலையங்களிலும் பயணச்சீட்டு வாங்கும் இடத்துக்கு அருகில் ரயில் ஏறும் நடைமேடை இருக்கும். அரக்கோணத்திலோ, பயணச்சீட்டு வாங்கும் பகுதியில் இருந்து 200 மீட்டர் தள்ளி, ரயில் ஏறும் பகுதி உள்ளது. இடையே இருப்புப்பாதைகள் உள்ளதால், பயணிகள் மேம்பாலத்தை கண்டிப்பாகப் பயன்படுத்தியே ஆக வேண்டும். இதைத் தவிர்க்க மேம்பாலத்துக்குச் செல்ல சாய்தளப் பாதை, வயதானவர்கள் செல்ல லிஃப்ட் அமைத்துத் தரப்படும் என்ற அறிவிப்பும் செயல்படுத்தப்படவில்லை.

தவிர, பயணிகளுக்கு சரியான வாகன நிறுத்துமிடங்கள் இல்லை. தற்போது ரயில்வே அனுமதியுடன் இருக்கும் இரு வாகன நிறுத்துமிடங்களிலும் காலை 8 மணிக்கே வாகனங்கள் நிறைந்து விடுகின்றன. எனவே, பயணிகள் பயணச்சீட்டு அலுவலகம் எதிரில் பாதுகாப்பற்ற நிலையில் வாகனத்தை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். மேலும், வாகன நிறுத்துமிடங்களில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆண்டுக்கு ரூ. 35 கோடி வருவாய் அளிக்கும் அரக்கோணம் ரயில்நிலையம் குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் பாராமுகமாகவே இருக்கிறது.

நடைமேடை நீட்டிப்புப் பணிகள், சென்னை செல்லும் மூன்றாம், நான்காம் இருப்புப்பாதைகள் அமைக்கும் பணிகள், சுழற்சி ரயில்பாதைப் பணிகள் ஆகியவை விரைந்து முடிக்கப்பட்டால், பயணிகள் பயனடைவார்கள்; அரக்கோணம் ரயில்நிலையத்துக்கு மேலும் வருவாய் சேரும். தெற்கு ரயில்வே நிர்வாகம் கவனிக்குமா?

பயணிகள் சங்கத்தினர் கூறுவது என்ன?

இதுகுறித்து அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவர் மாசிலாமணி கூறியதாவது:

பலமுறை நாங்கள் ரயில்வே உயரதிகாரிகளை அணுகி நேரிலும், தபாலிலும் மின்னஞ்சலிலும் புகார்களை அனுப்பி இருக்கிறோம். ஆனால், அரக்கோணம் ரயில்நிலையப் பயணிகள் மீது அக்கறை கொள்வார் யாரும் இல்லை.

ரயில்நிலைய மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டு ஓர் ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை முடியவில்லை. மிகவும் மெத்தனமாக நடந்து வந்த இந்தப் பணிகளும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டன. முதல், நான்காம், ஐந்தாம் நடைமேடைப் பகுதிகளில் போதிய மேற்கூரைகள் இல்லை. குழாய்களில் குடிநீரும் வருவதில்லை என்றார்.

இச்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் முனிபிரசாத், ""ரயில்நிலையத்தில் கழிப்பறைகளை இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். ஏலகிரி எக்ஸ்பிரஸில் கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும். நிலைய பயணச்சீட்டு வழங்கும் முதன்மை அலுவலகப் பகுதியில் கழிப்பறை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகிறோம்'' என்றார்.

இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரகுநாதன் மேலும் குறைகளை அடுக்குகிறார்.

அவர் கூறியது:

மும்முரமான காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் கால் மணி நேரத்துக்கு ஒன்றும், இடைப்பட்ட நேரத்தில் அரைமணி நேரத்திற்கு ஒன்றும் என புறநகர் மின்சார ரயில்களை சென்னைக்கு இயக்க வேண்டும் என்று கோரி பல வருடங்களாகியும், நிறைவேறவில்லை. அரக்கோணத்திலிருந்து செல்லும் ரயில்களில் பயணிகள் தொங்கியபடி செல்லும் காட்சி தொடர்கிறது.

அரக்கோணம் சந்திப்பில் தினமும் 35-க்கு மேற்பட்ட ரயில்கள் நிற்காமல் செல்கின்றன. இந்த ரயில்களுக்குச் செல்ல அரக்கோணத்தில் பயணிகள் இருந்தும், அவர்களின் நலன் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மும்பையில் இருந்து வரும்போது சூப்பர் மும்பை எக்ஸ்பிரஸ் இங்கு நிற்கிறது. ஆனால் அதே ரயில் மும்பை செல்லும் போது நிற்காமல் செல்கிறது. இரவில் காட்பாடி, அரக்கோணம் வழியே சென்னை செல்லும் நீண்ட தொலைவு ரயில்கள் அரக்கோணத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

அரக்கோணம் நகர மளிகை வியாபாரிகள் சங்கச் செயலாளரான ஜிடிஎன் அசோகனும், ரயில் பயணிகள் சங்கத்தின் கோரிக்கைகள் கிடப்பில் போடப்படுகின்றன என்று வருத்தம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.