முகப்பு
வேலூர்

அரக்கோணத்தில் பேருந்து வசதியில்லை

வேலூர் மாவட்டத்தின் கடைக்கோடி நகரமாக அரக்கோணம் இருப்பதால், வேலூர், திருவள்ளூர் மாவட்ட போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளை கவனிப்பதே இல்லை.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:40 AM
பகிர்:

வேலூர் மாவட்டத்தின் கடைக்கோடி நகரமாக அரக்கோணம் இருப்பதால், வேலூர், திருவள்ளூர் மாவட்ட போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளை கவனிப்பதே இல்லை. இதனால், அரக்கோணம் நகரையொட்டி இருக்கும் பல்வேறு கிராமங்களுக்குச் செல்ல போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அருகில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், சோளிங்கர் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் நடுவில் உள்ள இந்தக் கிராமங்களுக்கு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்ல மறுக்கின்றன. அப்படியே ஏற்றிச் சென்றாலும் விரைவுப் பேருந்து என்பதால் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன.

அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு கடந்த காலங்களில் டி-49 எனும் நகரப் பேருந்து இயக்கப்பட்டது. இதில் உள்ள பெருமூச்சி, அரிகலபாடி, தக்கோலம் கூட்டுச்சாலை, இலுப்பைதண்டலம், மஞ்சம்பாடி, பரமேஸ்வரமங்கலம், பின்னாவரம், சேந்தமங்கலம், பள்ளூர், கோவிந்தவாடி அகரம், ஊவேரி, கூரம் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் நகரப் பேருந்துக் கட்டணத்தைச் செலுத்தி சென்று வந்தனர்.

இந்தப் பேருந்து நிறுத்தப்பட்டதால் மேற்கண்ட கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். காஞ்சிபுரம் சாலையில் இருந்து உள்ளே உள்ள கிராமங்களுக்குச் செல்லும் மக்களோ மிகுந்த சிரமப்படுகின்றனர்.

பொய்பாக்கம், ஆத்தூர், சயனபுரம், புதுகண்டிகை, திருமால்பூர், கணபதிபுரம், சித்தூர், முருங்கை போன்ற கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் அரக்கோணத்தில் இருந்து நேரடிப் பேருந்து வசதி இல்லாததால் ஷேர் ஆட்டோக்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இவர்களது கோரிக்கை, நேரடியாக காஞ்சிபுரத்துக்கு இயக்கப்பட்ட டி-49 பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பதே.

அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் திருவாலங்காடு வரை போதுமான எண்ணிக்கையில் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் அவை தற்போது நிறுத்தப்பட்டு ஒரே ஒரு பேருந்து மட்டுமே திருவாலங்காடு வரை காலை, மாலை நேரங்களில் இயக்கப்படுகிறது. இடைப்பட்ட கிராமங்களுக்குச் செல்வோர் திருவள்ளூர் செல்லும் விரைவுப் பேருந்தில் அதிகப்படியான கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை.

இந்தச் சாலையில் எஃகு நகர், சில்வர்பேட்டை, முள்வாய், ஆனைப்பாளையம், அக்ராவரம், வியாசபுரம், திருவாலங்காடு செல்ல வேண்டிய பயணிகள் பேருந்து இல்லாமல் ஷேர் ஆட்டோக்களை நம்ப வேண்டிய நிலை. குறிப்பாக முள்வாய், ஆனைப்பாளையம் செல்லும் அரசு நகரப் பேருந்து முறையாக வருவதில்லை. இதே நிலை மோசூர், செய்யூர், அவிநாசிகண்டிகை, நகரிகுப்பம், உரியூர் செல்லும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சாலையில் இயக்கப்படும் நகரப் பேருந்து நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது இந்தக் கிராம மக்களின் கோரிக்கை.

அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையிலும் அதன் கிளைச்சாலைகளிலும் அதிக கிராமங்கள் உள்ளன. இவற்றுக்குச் செல்ல அரக்கோணத்தில் இருந்து போதிய பேருந்து வசதியில்லாததால் இக்கிராம மக்கள் ஷேர்ஆட்டோக்களை நம்பியுள்ளனர்.

அரக்கோணம் சோளிங்கர் சாலையில் செல்லும் பல பேருந்துகள் சாலை கிராமத்தில் மட்டுமே நின்று செல்கின்றன. வழியில் உள்ள கிராமங்களான கும்பினிபேட்டை, சித்தேரி, வேடல், பாராஞ்சி, கூடலூர், கரிக்கல், ஐய்ப்பேடு, தாளிக்கால், நரசிங்கபுரம் ஆகிய கிராம மக்களை விரைவுப் பேருந்துகள் ஏற்ற மறுக்கின்றன. எனவே இப்பகுதிகளுக்கு போதிய எண்ணிக்கையில் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்.

மேலும் இந்தச் சாலையில் இருந்து உள்ளே செல்லும் கிராமங்களான கைனூர், அசமந்தூர், மிட்டபேட்டை, பெருமாள்ராஜபேட்டை, சோகனூர், குருவராஜபேட்டை, செம்பேடு, நந்திவேடுதாங்கல், மின்னல், நரசிங்கபுரம், ஆவதம், குன்னத்தூர், மேட்டுகுன்னத்தூர், அன்வர்திகான்பேட்டை, மேல்களத்தூர், காட்டுப்பாக்கம், பரவத்தூர், பனவட்டாம்பாடி, தப்பூர், பழையபாளையம் மோட்டூர், போலிபாக்கம் ஆகிய கிராமங்களுக்கும் போதிய எண்ணிக்கையில் நகரப் பேருந்துகளை இயக்கப்பட வேண்டும்.

அரக்கோணத்தில் இருந்து நெமிலி வழியாக ஓச்சேரி சாலையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நகரப் பேருந்து வசதி இல்லை. பிரதான சாலையில் அமைந்துள்ள கிராம மக்களை பேருந்துகள் ஏற்றிச் சென்றாலும் உள்பகுதியில் உள்ள கிராமங்களான சம்பத்ராயன்பேட்டை, கீழ்களத்தூர், அசநெல்லிகுப்பம், நெல்வாய், புதுகண்டிகை, கீழ்வெங்கடாபுரம், ஆட்டுப்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு அரக்கோணத்தில் இருந்து நகரப் பேருந்துகள் காலையில் ஒன்றும், மாலையில் ஒன்றுமாக இயக்கப்படுவதால் போதுமான பேருந்து வசதியின்றி இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.

சம்பத்ராயன்பேட்டைக்கு திருத்தணியில் இருந்து அரக்கோணம் வழியே இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்து தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. அதை மீண்டும் இயக்க வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பு.

தக்கோலத்துக்கு அருகிலுள்ள அனந்தாபுரம், உரியூர்குப்பம், முருங்கை, சித்தூர், கணபதிபுரம் ஆகிய கிராமங்களுக்கு அரக்கோணத்தில் இருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர்.

இந்தக் கோரிக்கைகளை விட அரக்கோணம் நகரில் இருந்து சுற்றுப்புற நகரங்களான காஞ்சிபுரம், திருப்பதி, வேலூர் செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விரைவுப் பேருந்துகளை மட்டுமே இயக்குகிறது. சாதாரண பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால் தனியார் பேருந்துகளின் கட்டணங்களை விட அரசுப் பேருந்துகளின் கட்டணம் அதிகமாக உள்ளது.

தற்போது வேலூருக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஎஸ்எஸ் பேருந்துகளின் நடைகளை அதிகரிக்க வேண்டும் என்பதும், காஞ்சிபுரம் வழியே செங்கல்பட்டுக்கு அரக்கோணத்தில் இருந்து டிஎஸ்எஸ் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கை.

காஞ்சிபுரத்தில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்துகளில் அரக்கோணம் பயணிகளை ஏற்றுவதே இல்லை. இந்நிலையும் மாற்றப்பட வேண்டும்.

மேலும் தமிழகத்தின் அனைத்து வட்டங்களில் இருந்தும் சென்னைக்கு நேரடியாகப் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அரக்கோணத்தில் இருந்து சென்னை- கோயம்பேட்டுக்கு ஒரு பேருந்துகூட இயக்கப்படுவதில்லை.

தற்போது அரக்கோணத்தில் இருந்து பூந்தமல்லி வரை இயக்கப்படும் பேருந்தை கோயம்பேடு வரை நீட்டிக்க வேண்டும். மேலும் சென்னை மாநகரில் இருந்து பேரம்பாக்கம் வரை இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளை தக்கோலம் வரை நீட்டிக்க வேண்டும். இதற்கு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.