முகப்பு
வேலூர்

தொகுதி மக்களின் 50 ஆண்டுக்கால கனவு நிறைவேற்றம்:சு. ரவி எம்.எல்.ஏ

அரக்கோணம்: 2011-இல் அரக்கோணம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சு.ரவி, தான் அளித்த வாக்குறுதிகள் குறித்தும் சாதித்தவை குறித்தும் அவரே சொல்கிறார்...

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

சு. ரவி (அதிமுக)

சட்டப்பேரவை உறுப்பினர்

அரக்கோணம்

அரக்கோணம்: 2011-இல் அரக்கோணம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சு.ரவி, தான் அளித்த வாக்குறுதிகள் குறித்தும் சாதித்தவை குறித்தும் அவரே சொல்கிறார்...

அளித்த வாக்குறுதிகள்:

அரக்கோணத்தில் அரசு கலைக் கல்லூரியைக் கொண்டு வருவேன். சார்பு நீதிமன்றம் அமைக்க ஏற்பாடு செய்வேன். தக்கோலம் கூட்டுசாலை அருகே ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். அரக்கோணம் நகரில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை வளாகம் அமைக்கப்படும். அரக்கோணம் நகர குடிநீர் பிரச்சினையை தீர்ப்பேன்.

அரக்கோணம் நகரத்தில் புறவழிச்சாலை அமைப்பேன். தக்கோலம் -அனந்தாபுரம் இடையே ஆற்றில் பாலம் அமைப்பேன். காஞ்சிபுரம் சாலையில் உள்ள கல்லாற்றுப் பாலத்தை மாற்றி புதிய பாலம் அமைப்பேன், வளர்புரம்- கிருஷ்ணாபுரம் இடையே நந்தியாற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பேன்.

தொகுதியில் அனைத்து வார்டுகள் மற்றும் அனைத்து கிராமங்களிலும் நியாயவிலைக் கடைகளுக்கு சொந்தக் கட்டடங்களைக் கட்டி, நியாயவிலைக் கடைகள் இல்லாத கிராமம் இல்லை என்று கூறும் வகையில் தொகுதியை மாற்றுவேன்.

நிறைவேற்றப்பட்டவை:

வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டவற்றில் மிகவும் முக்கியமானது, தொகுதி மக்களின் 50 ஆண்டுக்கால கனவான அரக்கோணத்தில் அரசு கலைக் கல்லூரி அமைத்தது தான். 1957 முதல் 2006 வரை 12 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் அமைக்கப்படாத கலைக் கல்லூரி, சு.ரவியிந்பதவிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டது.

அரசு கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதுடன், அக்கல்லூரிக்கு ரூ. 7.25 கோடி நிதியில் சொந்தக் கட்டடத்தை ஆட்டுப்பாக்கம் கிராமத்தில் கட்டி, அக்கல்லூரி ஆதிதிராவிட மாணவர்களுக்கு விடுதியும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுதியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரக்கோணத்தில் சார்பு நீதிமன்றம் கொண்டு வரப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. தக்கோலம் கூட்டு சாலையில ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் நகரில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

தக்கோலம் அனந்தாபுரம் இடையே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு விட்டது. அரக்கோணம் நகர குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரக்கோணம் தொகுதியில் தக்கோலம், செய்யூர், சேந்தமங்கலம் ஆகிய இடங்களில் கால்நடை மருத்தகங்கள் தலா ரூ. 26 லட்சம் நிதியில் கட்டப்பட்டுள்ளன. கீழ்வெங்கடாபுரம், கடவாரிகண்டிகையில் புதிய கால்நடை மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.

தொகுதியில் குறைந்த மின்னழுத்தப் பிரச்னயைத் தீர்க்க அரக்கோணம் நகரம், இச்சிப்புதூர், புன்னை ஆகிய இடங்களில் துணை மின்சார நிலையங்களை அமைத்துள்ளேன். நகரில் 90 இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைத்து அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையில்லாத மின்சாரம் வரச் செய்ததது, நான் சொல்லாமலேயே செய்ததாகும்.

நிறைவேற்றாதவை:

அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றாததில் முக்கியமானது புறவழிச்சாலை ஆகும். அரக்கோணம் நகரின் போக்குவரத்து பிரச்னையைத் தீர்க்க முக்கியமானது புறவழிச்சாலை தான். இதுகுறித்து எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தது:

காஞ்சிபுரம்- அரக்கோணம் சாலையை, அரக்கோணம்- திருத்தணி சாலையோடு இணைக்கும் புறவழிச்சாலையை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சதுரங்கபட்டினம்- திருப்பதி இடையிலான சாலையை நான்குவழிச் சாலையாக்க மத்தியஅரசு திட்டம் அறிவித்து பணிகள் துவக்கப்பட்டன. இந்த புறவழிச்சாலை அந்தத் திட்டத்தில் உள்ளதால், அரக்கோணம் புறவழிச்சாலைக்கு தமிழக அரசால் நிதி ஒதுக்க முடியவில்லை என்றார்.

மேலும் வளர்புரம்- கிருஷ்ணாபுரம் மேம்பாலம் பணியும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. திருவள்ளூர் சாலைக்கு மாற்று, புறவழிச்சாலையும் ஏற்படுத்தப்படவில்லை. நகரில் போக்குவரத்துப் பிரச்னையைத் தீர்க்கும் மேம்பாலம் கட்டும் பணியும் நடைபெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.