தடை செய்யப்பட்ட மருந்துகள் தொடர்ந்து விற்பனை:நடவடிக்கை எடுப்பது யார்?
அண்மையில் 356 மருந்துகளின் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்தது. இவற்றில் பல மருந்துகள், சாதாரண பெட்டிக் கடைகளில் கூட விற்கப்படுபவை. தடை செய்யப்பட்ட நிலையிலும், இந்த மருந்துகள் பல கடைகளில் தொடர்ந்து விற்கப்பட்டு வருகின்றன. தடை குறித்து அறியாத மக்கள் அவற்றை வாங்கிப் பயன்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
அண்மையில் 356 மருந்துகளின் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்தது. இவற்றில் பல மருந்துகள், சாதாரண பெட்டிக் கடைகளில் கூட விற்கப்படுபவை. தடை செய்யப்பட்ட நிலையிலும், இந்த மருந்துகள் பல கடைகளில் தொடர்ந்து விற்கப்பட்டு வருகின்றன. தடை குறித்து அறியாத மக்கள் அவற்றை வாங்கிப் பயன்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
கடந்த 10-ஆம் தேதி மத்திய அரசு 356 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த மருந்துகளைத் தயாரிப்பதற்கும், மொத்தமாகவோ, சில்லறையாகவோ விற்பனை செய்வதற்கும் அந்த உத்தரவில் தடை விதிக்கப்பட்டது. கையிருப்பில் இருக்கும் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டுமே தவிர விற்கக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட மாத்திரைகளின் பட்டியலில் விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா, டிகோல்ட், கோல்ட் ஆக்ட் ஆகியவையும் உள்ளன. இதில் விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா, டிகோல்ட் ஆகிய இரண்டும் மருந்துக் கடைகள் மட்டுமல்லாது, சாதாரண கடைகளிலும் கிடைக்கின்றன. மேலும், பெட்டிக்கடைகளிலும் அவை காணப்படுகின்றன.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறையினரோ, மாவட்ட மருந்து ஆய்வாளர் அலுவலகத்தினரோ, மாவட்ட சுகாதாரத் துறையினரோ, மருத்துவத் துறையினரோ எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
மாநில அரசும் எந்தெந்த மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தை விளம்பரமாக வெளியிடவில்லை. இதனால், பொதுமக்கள் தடை செய்யப்பட்ட விவரத்தை அறியாமல் தொடர்ந்து அந்த மருந்துகளை வாங்குகின்றனர்.
குறைந்தபட்சம், மாநகராட்சி, நகராட்சிகளின் சுகாதாரத் துறையினராவது தங்கள் பகுதிகளில் உள்ள மருந்துக் கடைகளிலும், பெட்டிக் கடைகளிலும் அவ்வப்போது சோதனை நடத்தி இந்த விற்பனையைத் தடை செய்யும் பணியைத் தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, அரக்கோணம் நகர மருந்து வணிகர் சங்கத் தலைவர் அரிகுமார் கூறியதாவது:
தற்போது தடை செய்யப்பட்டுள்ள மருந்துகளில், வணிகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவை மூன்று மட்டுமே. மீதி அனைத்தும் குறிப்பிட்ட கலவை இருக்கும் மருந்துகள் என அரசு அறிவித்துள்ளது. இந்த விஷயத்தில் என்னென்ன கலவைகளுக்குத் தடை, அந்தக் கலவைகளை எந்தெந்த நிறுவனங்கள் தயாரிக்கின்றன, அந்த நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளின் பெயர் போன்ற விவரங்களை மருந்து விற்பனையாளர்களுக்கு அரசு அளிக்கவில்லை. விரைவில் வேலூரில் நடக்க உள்ள மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்து, எந்தெந்த மருந்துகளின் விற்பனையை நிறுத்துவது என முடிவு செய்ய உள்ளோம்.
இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் மாவட்டத்தின் அனைத்து மருந்துக் கடைகளுக்கும் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் அனுப்பப்படும் என்றார்.
மருந்து தடை விஷயத்தில், மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறையுடன் இணைந்து, தடை செய்யப்பட்ட மாத்திரைகளை கடைகளில் பறிமுதல் செய்து, இந்தத் தடை குறித்து மக்கள் அறியும்படி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.