வேலூர்

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அனுமதிக்கு விரைவில் இணையவழி நடைமுறை'

DIN

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒற்றைச் சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி பெறுவதற்கான இணையவழி நடைமுறை வரும் மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத் தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் ஆம்பூர் அரிமா சங்க அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் தொழில் வணிகத் துறை ஆணையர், இயக்குநர் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு முதல்கட்டமாக ஆம்பூரில் நடைபெற்றது.
இதில், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளர் மணிவண்ணன் தலைமை வகித்துப் பேசியதாவது: 
எரிசக்தி தணிக்கைக்குப் பிறகு இயந்திரங்களை புதிதாக அமைப்பதற்கு வணிகக் குறியீடு, பார் கோடு வாங்குவதற்கு மானிய உதவி தமிழக அரசால் வழங்கப்படுகிறது. 
சிறிய தொழில் முனைவோர் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பொருள்களுக்கான பணம் வராதபட்சத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் அதை வசூலித்து தருவதற்கான நடவடிக்கையும் எடுக்கும்.
புதிதாக தொழில் தொடங்குவதற்கான பல்துறைகளின் அனுமதியை ஒற்றைச் சாளர முறையில் பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரிய தொழில் நிறுவனங்களுக்கான அனுமதி பெறும் நடைமுறை இணையவழி மூலம் நடைமுறைக்கு வந்துள்ளது. 
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி பெறுவதற்கான இணையவழி நடைமுறை வரும் மாதத்தில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
முகாமில், மாவட்டத் தொழில் மைய திட்ட மேலாளர் அசோகன் வரவேற்றார். மாவட்ட இந்தியன் வங்கி மேலாளர் தாமோதரன், மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர் சங்க தலைவர் எம்.வி. சுவாமிநாதன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுந்தரராஜ், பாரத ஸ்டேட் வங்கி வட்டார மேலாளர் சாரதி ஆகியோர் பேசினர்.
வேலூர் மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர் சங்கச் செயலாளர் பி. ஹரிஹரன், துணைத் தலைவர் ஆர். ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், வங்கி மேலாளர்கள் காந்தராஜ், ராகுல்ஷா, ஆனந் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், மாவட்டத் தொழில் மையம் மூலம் வழங்கப்படும் மானிய உதவி, கடனுதவி திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT