தனியார் பொது சேவை மைய கணினிகள் உடைப்பு: பாஜக பிரமுகர் கைது
பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்காக விண்ணப்பதாரர்களை பதிவு செய்வதில் ஏற்பட்ட தகராறில் தனியார் பொது சேவை மையத்தில்
பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்காக விண்ணப்பதாரர்களை பதிவு செய்வதில் ஏற்பட்ட தகராறில் தனியார் பொது சேவை மையத்தில் கணினிகள் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தி அதன் உரிமையாளரைத் தாக்கியதாக அரக்கோணம் நகர பாஜக பிரமுகர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்காக விண்ணப்ப பெயர் பதிவு செய்யும் பணியை பல இடங்களில் கணினிகள் மூலம் தனியார் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, அரக்கோணத்தில் பாஜக முன்னாள் நகரப் பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியும் சுவால்பேட்டை கீழண்டை ஒப்பணக்கார தெருவில் மையம் அமைத்து பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்து பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், இப்பகுதிக்கு அருகே தாசில்தார் தெருவில் சென்னை, கொரட்டூர், ராகவேந்திரா நகரைச் சேர்ந்த அருண் (45) பொதுசேவை மையம் திறந்து, அதே திட்டத்துக்காக விண்ணப்பப் பதிவு பணிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணமூர்த்தி அருணை தாக்கியதாகவும், மேலும் அங்கிருந்த கணினி மற்றும் சில பொருள்களை உடைத்து நாசப்படுத்தியாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அருண், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அருண் அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை வியாழக்கிழமை கைது செய்து, அரக்கோணம் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.