திருப்பத்தூரில் மழை: குளமாக மாறிய சாலை: வாகன ஓட்டிகள் அவதி
திருப்பத்தூரில் சிறிது நேரம் பெய்த மழைக்கே பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கி குளமாகக் காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
திருப்பத்தூரில் சிறிது நேரம் பெய்த மழைக்கே பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கி குளமாகக் காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
திருப்பத்தூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் இதுவரை முடியவில்லை. இத்திட்டத்துக்காக பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனர். பணிகளை விரைந்து முடிக்கக் கோரி பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றும் பணிகள் முடியவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை மாலை சுமார் 10 நிமிடங்கள் மழை பெய்தது. இதனால், நகரில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக, ரயில்வே சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் மழைநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. இந்த சாலை வழியே தான் நகரக் காவல் நிலையம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், பள்ளிகள் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். மேலும், 108 ஆம்பூலன்ஸ் வாகனம் செல்வதில் சிரமம் உள்ளது.
சாலையைச் சீரமைக்கக் கோரி கடந்த 10 நாள்களுக்கு முன் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து சாலை செப்பனிடப்பட்டது. ஆனால், புதன்கிழமை பெய்த மழையால் அச்சாலைகள் மீண்டும் சேதமடைந்துள்ளன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.