ரயிலில் தவறவிட்ட பணத்தை மீட்டுத் தந்த போலீஸார்
ரயிலில் தவறவிட்ட பணத்தை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மீட்டு உரியவரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.
ரயிலில் தவறவிட்ட பணத்தை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மீட்டு உரியவரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர்.
ஆம்பூரைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் சென்னை, மேடவாக்கம் இந்தியன் வங்கியில் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.
சனிக்கிழமை இரவு சென்னையிலிருந்து காவேரி விரைவு ரயிலில் ஆம்பூருக்கு வந்தார்.
ரயிலில் இருந்து இறங்கி பார்த்தபோது, தனது பாக்கெட்டில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 24 ஆயிரத்தை ரயிலில் தவறவிட்டது தெரியவந்தது.
ஆம்பூர் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் லோகநாதன் மற்றும் ரயில் நிலைய மேலாளர் பிரபாகரன் ஆகியோரிடம் பணம் தவறவிட்டது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் இதுகுறித்து உடனடியாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் பி.செந்தில்ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் பி.முருகன் ஆகியோர் ஜோலார்பேட்டை சென்றடைந்த காவேரி விரைவு ரயிலில் சம்பந்தப்பட்ட பெட்டிக்குச் சென்று, அங்கிருந்த ரொக்கம் ரூ. 24 ஆயிரத்தை மீட்டனர்.
இதையடுத்து, ஜோலார்பேட்டையில் பழனிவேலிடம் பணத்தை ஒப்படைத்தனர்.