குறைதீர் கூட்டத்தில் 5 பேருக்கு பணி நியமன ஆணை
வேலூரில் நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் கருணை அடிப்படையில் மாற்றுத்திறனாளி உள்பட 5 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வழங்கினார்.
வேலூரில் நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் கருணை அடிப்படையில் மாற்றுத்திறனாளி உள்பட 5 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வழங்கினார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், நிலப்பட்டா, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கடனுதவி, நிதியுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, காவல்துறை பாதுகாப்பு, மின்இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 241 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாற்றுத் திறனாளியான குமரவேல் என்பவருக்கு தோட்டக்கலைத் துறை, துணை இயக்குநர் அலுவலகத்தில் தாற்காலிக தகவலியல் பதிவாளர் பணி நியமன ஆணையும், வருவாய்த் துறை சார்பில் 4 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையும், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 4 பேருக்கு ரூ. 7 லட்சத்துக்கான காசோலைகளையும் ஆட்சியர் வழங்கினார்.
மேலும், மதுரையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 14-ஆ வது மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பங்குபெற்று முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி ஆட்சியர் வாழ்த்துத் தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் கஜேந்திரன், மாவட்ட சமூகப் பாதுகாப்பு அலுவலர் பேபிஇந்திரா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெ.ஜெயக்குமார், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பொன்னு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.