மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
பேர்ணாம்பட்டில் மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பேர்ணாம்பட்டில் மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பேர்ணாம்பட்டில் அரசு ஆதி திராவிட மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரவி (48), கடந்த சில மாதங்களாக அதே பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் தொடர்ந்து தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த மாணவி கடந்த 2 மாதமாக பள்ளிக்குச் செல்லவில்லையாம். இதையறிந்த பள்ளித் தலைமையாசிரியை கலைவாணி மாணவியின் பெற்றோரை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது தனது மகளிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதால் பள்ளிக்கு அனுப்பவில்லையென அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து பள்ளி மாணவிகளிடம் தலைமை ஆசிரியை விசாரணை நடத்தியுள்ளார். அதில் ஆசிரியர் ரவி தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. அதையடுத்து, அவர்கள் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியர் ரவியை பணியிலிருந்து நீக்கக் கோரி போராட்டம் நடத்தினர்.
இது சம்பந்தமாக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கஜேந்திரன் அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மாணவி தனக்கு நேர்ந்த பிரச்னை குறித்து கண்ணீருடன் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் தெரிவித்துள்ளார். அதேசமயம், அதே பள்ளியில் பணிபுரியும் மற்றொரு ஆசிரியரான முனுசாமி தன் மீது தவறான பழி சுமத்தியுள்ளதாக விசாரணையில் தெரிவித்திருந்தாராம். இதுகுறித்த விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ரவியை பணியிடை நீக்கம் செய்யவும், மற்றொரு ஆசிரியர் முனுசாமியை அரக்கோணம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யும்படியும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ரவியை பணியிடை நீக்கம் செய்தும், முனுசாமியை பணியிட மாறுதல் செய்தும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கஜேந்திரன் உத்தரவிட்டு கடிதம் அனுப்பினார்.