அரசுப் பள்ளி மாணவர்கள் திருவண்ணாமலைக்கு சுற்றுலா: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வேலூர் அரசுப் பள்ளி மாணவர்கள் 150 பேர் திருவண்ணாமலைக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
வேலூர் அரசுப் பள்ளி மாணவர்கள் 150 பேர் திருவண்ணாமலைக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சுற்றுலா விழிப்புணர்வுப் பேருந்தை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் புதன்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சுற்றுலா தலங்களின் முக்கியத்துவம், அவற்றின் வரலாறு ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள அரசு, அரசு உதவி பெறும் மாணவர்கள் இலவசமாக சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்று 2017-18-ஆம் நிதியாண்டு மானியக் கோரிக்கையின்போது தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் 3 பேருந்துகள் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு புதன்கிழமை சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்குள்ள திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், ரமணர் ஆசிரமம், சாத்தனூர் அணை ஆகிய இடங்கள் சுற்றி காண்பிக்கப்பட்டன.
முன்னதாக, வேலூர் கோட்டையில் இருந்து புறப்பட்ட இந்த சுற்றுலா விழிப்புணர்வுப் பேருந்துகளை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த சுற்றுலாவின் போது மாணவ, மாணவிகளுக்கு காலை, மதிய உணவுகள், சிற்றுண்டி, சுற்றுலா பை, தொப்பி ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதுடன், சுற்றுலா சென்று வந்ததற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் வி.ஜான் பிரிட்டோ, உதவி சுற்றுலா அலுவலர் இளமுருகன், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.