கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!
ஐக்கிய ஜனநாயக முன்னணியில் உள்ள ஐ.யூ.எம்.எல். வேட்பாளர்கள் பட்டியல் - பல எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு
மலப்புரம் : கேரள பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யூ.டி.எஃப்.) உள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) கட்சி தமது முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று(மார்ச் 17) வெளியிட்டது.
மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கேரளத்தில், யூ.டி.எஃப். கூட்டணியில் ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டியிடுகிறது. 25 வேட்பாளர்கள் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சேலக்கரா மற்றும் புனலூர் தொகுதிக்கான வேட்பாளர்கள் யார் என்பதை அடுத்த இரண்டு நாள்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் வரும் ஏப். 9-இல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையும் அதன் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளும் மே 4-இல் வெளியாகின்றன.
இந்நிலையில், அங்கு ஆளுங்கட்சியாக உள்ள சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி(எல்.டி.எஃப்.), தொடர்ச்சியாக 3-ஆவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்க முனைப்பு காட்டுகிறது. எதிரணியில் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் பாஜகவும் போட்டியிடுகின்றன. இதனால் கேரளத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.